ஒரு லிட்டர் பசு கோமியம் 4 ரூபாய்: சத்தீஸ்கர் மாநில முதல்வர் அதிரடி

ஒரு லிட்டர் பசு கோமியம் 4 ரூபாய்: சத்தீஸ்கர் மாநில முதல்வர் அதிரடி

பசு மாட்டின் சாணத்தை அடுத்து அதன் கோமியத்தையும் விலைக்கு பெறுகிறது சத்தீஸ்கரின் காங்கிரஸ் அரசு. இதன் விலையாக ஒரு லிட்டருக்கு ரூ.4 அளிக்க முதல்வர் பூபேஷ் பகேல் உத்தரவிட்டுள்ளார்.

பசுவின் சாணம் மற்றும் கோமியத்தில் பல மருந்து பொருள்கள் உள்ளதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்துக்களின் புனித விலங்காகவும் இந்த பசு மாடுகள் கருதப்படுகின்றன. இதனால், கோவிட் உள்ளிட்ட அனைத்து நோய்களையும் பசுவின் கோமியம் குணப்படுத்தும் என பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். இச்சுழலில் முதன்முறையாக காங்கிரஸ் ஆளும் மாநில அரசு சார்பில் பசு மாட்டின் சாணமும், கோமியமும் விலைக்கு பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் நேற்று ஹரேலி எனும் விவசாயிகள் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி, முதல்வர் பூபேஷ் பகேல் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதில், பசுவின் கோமியத்தை ஒரு லிட்டர் ரூ.4 விலையில் அரசு பெறும் என அறிவித்தார். இதில், அம்மாநில அரசு பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறும் ஒரு லிட்டர் கோமியத்திற்கு விலையாக ரூ.4 அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோமியத்தை சத்தீஸ்கரின் அனைத்து மாவட்டங்களின் சுயஉதவிக் குழுக்களின் வழியாக பெறப்படுகிறது. முதல் கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா இரண்டு சுய உதவிக் குழுக்கள் கோமியம் பெற அமர்த்தப்பட்டுள்ளனர். அரசு சார்பில் இந்த கோமியம் பெறுவதை நேற்று துர்க் மாவட்டத்தின் ஹரேலி நிகழ்ச்சியில் முதல்வர் பூபேந்தர் பகேல் தொடங்கிவைத்தார்.

முதல்வர் பூபேஷ் பகேல்
முதல்வர் பூபேஷ் பகேல்

ஏற்கெனவே, கடந்த ஜுலை 20, 2020-ல் வந்த ஹரேலி பண்டிகை முதல் பசு மாட்டின் சாணம், சத்தீஸ்கர் அரசு சார்பில் விலைக்கு பெறப்படுகிறது. ஒரு கிலோவிற்கு ரூ.2 வழங்கப்படுகிறது. இதன்மூலம், 20 லட்சம் குவிண்டால் அளவிலான உரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஒன்றரை கோடியில் சாணங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் பயனால் சத்தீஸ்கரில் இயற்கை வேளாண்மை வளர்ச்சி பெறுகிறது.

இவற்றை சத்தீஸ்கர் அரசின் வேளாண் நலன் வளர்ச்சி மற்றும் பயோடெக்னாலஜி துறையால் பெறப்படுகிறது. இதன் நிர்வாக இயக்குநரான டாக்டர்.அயாஸ் தம்போலி சார்பில் சத்தீஸ்கரின் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சாணத்துடன் சேர்த்து கோமியத்தையும் பெற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இம்மாநிலத்தின் பசு மாடுகள் வளர்ப்பவர்களுக்கும் அதற்கானக் கூடுதல் பலன் கிடைத்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in