`நீர் நிலைகளில் உள்ள நீதிமன்றங்களை இடிக்க உத்தரவிடுவது யார்?’- கே.பாலகிருஷ்ணன் கேள்வி

`நீர் நிலைகளில் உள்ள நீதிமன்றங்களை இடிக்க உத்தரவிடுவது யார்?’- கே.பாலகிருஷ்ணன் கேள்வி

“பல்வேறு இடங்களில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் குடியிருப்புகளே நீர் நிலைகளில் தான் கட்டப்பட்டுள்ளது. இவற்றை இடிக்க யார் உத்தரவு போடுவார்கள்? நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் “ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு முடிவுகளை விளக்கும் சிறப்புப் பேரவை கூட்டம் கிருஷ்ணகிரியில் இன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நாடாளுமன்றத்தின் நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட மின்சார சட்டம் 2022 நிறைவேற்றக்கூடாது. இந்தச் சட்டம் இயற்றப்பட்டால் மின்சாரத்துறை தனியாரிடம் சென்று விடும். அதோடு தனியார் சொல்லும் மின் கட்டணத்தைப் பொதுமக்கள் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இந்த மின்சார சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பதற்காகத் தொழிற்சங்கங்களை இணைந்து ஓர் புதிய இயக்கத்தை உருவாக்க இருக்கிறோம்.

நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி உள்ளவர்களை உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் எனவும், அந்த வீடுகளை இடிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் குடியிருப்புகளே நீர் நிலைகளில் தான் கட்டப்பட்டுள்ளது. இவற்றை இடிக்க யார் உத்தரவு போடுவார்கள்? நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். நீதிமன்றங்களின் இதுபோன்ற போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதே நிலை நீடித்தால் நீதிமன்றங்களை எதிர்த்து போராட்டங்கள் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in