டிசம்பர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி சிறையில் அடைப்பு

டிசம்பர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி சிறையில் அடைப்பு

தமிழக முதல்வரை பற்றி அவதூறான வகையில் பேசி கருத்து பதிவிட்ட வழக்கில் கைதான பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமியை டிசம்பர் 5-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து அரசியல் தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வருபவர் கிஷோர் கே.சுவாமி. பாஜக ஆதரவாளரான கிஷோர் கே.சுவாமி, திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஏற்கெனவே திமுகவின் முன்னாள் முதல்வர்கள், பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்டது உட்பட 7 வழக்குகளில் கிஷோர் கே.சுவாமியை கைது செய்த போலீஸார் கடந்த ஜூன் மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த கிஷோர் கே.சுவாமி மீண்டும் ட்விட்டரில் அரசியல் கட்சி தலைவர்கள் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி மழை வெள்ளத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டது குறித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பணிகளை விமர்சிக்கும் வகையிலும், புளியந்தோப்பு (டேஷ்) என தகாத வார்த்தையால் பேசி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு முதல்வரை அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக கூறி எழும்பூரை சேர்ந்த இம்ரான் என்பவர் கடந்த 3-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் கிஷோர் கே.சுவாமி மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் அவதூறு பரப்புதல், கலகத்தை தூண்டுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராகும் படி கிஷோர் கே.சுவாமிக்கு சம்மன் அனுப்பினர். விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான கிஷோர் கே.சுவாமி, முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தலைமறைவான கிஷோர் கே.சுவாமி பாண்டிச்சேரியில் பதுங்கி இருப்பதாக சைபர் க்ரைம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் இன்று காலை கிஷோர் கே.சுவாமியை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட கிஷோர் கே.சுவாமியை இன்று மாலை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கிரிஜாராஜன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதுஇ அவரை டிசம்பர் 5-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in