‘நாட்டுக்குத் தேவை படித்த பிரதமர்’ -குத்திக்காட்டும் கேஜ்ரிவால்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

’நாட்டுக்கு படித்த பிரதமர் தேவை’ என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் முழங்கியிருப்பது, பாஜக கூடாரத்தில் கொந்தளிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அங்கே ஆம் ஆத்மி கட்சியை பரவலாக களமிறக்கி வருகிறார். டெல்லிக்கு வெளியே பஞ்சாப்பில் ஆட்சியமைத்த உத்வேகத்தில் இதர வட மாநிலங்களை குறிவைத்து ஆஆக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மபி தலைநகர் போபாலில் இன்று ஏற்பாடான பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், ”மத்திய பிரதேசத்தின் 230 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும். பாஜகவுக்கு மாற்றாகவே ஆம் ஆத்மி வந்துள்ளது. மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் மட்டுமன்றி அடுத்துவரும் மக்களவை தேர்தலிலும் பாஜக பெரும் பிரச்சினைகளை சந்திக்க இருக்கிறது” என்று அறிவித்தார்.

மேலும் அவர் பேசும்போது மோடியை மறைமுகமாக குறிவைத்து தாக்கினார். ”டெல்லி அரசின் கல்வியமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட நாளில்தான், நாட்டுக்கு ஒரு படித்த பிரதமர் எத்தனை முக்கியம் என்பதை உணர்ந்தேன். பாத்திரங்களை தட்டி கூச்சலிட்டால் கரோனா ஓடிவிடும் என்று படித்த பிரதமர் ஒருவரால் சொல்ல முடியாது. எனவே, பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் அறிந்த ஒருவர் நாட்டுக்கு பிரதமராக வர வேண்டும்” என்று கேஜ்ரிவால் வலியுறுத்தினார்.

டெல்லி ஆம் ஆத்மி அரசின் 2 அமைச்சர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதில், அரவிந்த் கேஜ்ரிவால் சீற்றமடைந்ததே இவ்வாறான தாக்குதலுக்கு காரணம் என தெரிய வருகிறது. இந்த போக்கில் மத்திய பிரதேசம் சட்டப்பேரவைக்கான ஆஆக - பாஜக இடையிலான மோதல் மேலும் சூடுபிடிக்க உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in