'நாட்டுக்கு ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதி தேவையில்லை’: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ​​சீற்றம்!

யஷ்வந்த் சின்ஹா
யஷ்வந்த் சின்ஹா

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா, சிந்தித்து பேசும் நபர்தான் நாட்டின் குடியரசுத் தலைவராக இருக்க வேண்டும், ரப்பர் ஸ்டாம்ப் போன்ற நபர் இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்முவின் வேட்புமனுவை பிரதமர் நரேந்திர மோடி சமர்ப்பித்ததை விமர்சித்த யஷ்வந்த் சின்ஹா, தனது ஆவணங்களை தானே சமர்பித்ததாக கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவுக்கு அரசியலமைப்பின் பாரபட்சமற்ற பாதுகாவலராக பணியாற்றும் குடியரசுத்தலைவர் தேவை, அரசாங்கத்திற்கு ரப்பர் ஸ்டாம்ப் போல செயல்படுபவர் தேவையில்லை. ஜனாதிபதி தனக்கென ஒரு நேர்மையான மனதைக் கொண்டிருக்க வேண்டும், ஆட்சி நிர்வாகம் அல்லது அரசின் பிற அமைப்புகள் அரசியலமைப்பு கோட்பாடுகளில் இருந்து விலகும் போது எப்போது வேண்டுமானாலும் பயம் அல்லது யாரின் சார்பும் இல்லாமல் அதை மனசாட்சியுடன் பயன்படுத்த வேண்டும். அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் உயரிய பார்வைக்கு தகுதியான ஜனாதிபதியாக நான் பணியாற்றுவேன் என்பது இந்திய மக்களுக்கு நான் வழங்கும் ஆணித்தரமான உறுதி" என்று கூறினார்

அக்னிபத் எனும் ராணுவத்தின் புதிய பாதுகாப்பு ஆட்சேர்ப்பு திட்டத்தை யஷ்வந்த் சின்ஹா கடுமையாக விமர்சித்தார். ராஜஸ்தானின் உதய்பூரில் டெய்லர் ஒருவர் "காட்டுமிராண்டித்தனமாக" கொல்லப்பட்டதை கண்டித்த அவர், இதுபோன்ற வன்முறை சம்பவங்களுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை என்று கூறினார். மேலும், ஒரு சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தும் அடிப்படையற்ற குற்றச்சாட்டின் பேரில் பத்திரிகையாளர் முகமது சுபைர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் கண்டனம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in