‘அமைதியான குடியரசுத் தலைவர் நாட்டுக்கு தேவையில்லை’ - அதிரடியாக விளாசும் யஷ்வந்த் சின்ஹா

‘அமைதியான குடியரசுத் தலைவர் நாட்டுக்கு தேவையில்லை’ - அதிரடியாக விளாசும் யஷ்வந்த் சின்ஹா

நாட்டுக்கு அமைதியான குடியரசுத் தலைவர் தேவையில்லை. தனது தார்மீக அதிகாரத்தையும், விவேகத்தையும் பயன்படுத்துபவர்தான் தேவை என்று எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ​​தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு எதிர்க்கட்சிகள் மீது மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டிய யஷ்வந்த் சின்ஹா, தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை போன்ற மத்திய நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்துவேன் என்றார்.

மேலும் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் நிதியமைச்சராக தான் இருந்தபோது, ​​அரசியல் எதிரிகளை பழிவாங்க அப்போதைய அரசு மத்திய நிறுவனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததில்லை. இப்போது ​​அந்த ஏஜென்சிகள் வெட்கமின்றி தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று ஹரியானாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நிர்வாகத்திலும், பொது வாழ்விலும் எனக்கு 60 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. இந்த 60 ஆண்டுகளில் இப்போது பார்க்கும் அளவுக்கு மத்திய ஏஜென்சிகளின் பயங்கரத்தை நான் பார்த்ததில்லை. ஜனாதிபதி பதவி என்பது அரசியல் சாசனத்தின் மிக உயரிய பதவி என்பதால், நான் வெற்றிபெற்றால் பதவிப்பிரமாணம் செய்த அடுத்த நாளே இதுபோன்ற செயல்கள் நின்றுவிடும். ஜனாதிபதி பிரதமரை அழைத்து அவருக்கு அறிவுரை வழங்கினால், எந்த பிரதமரும் அதை முழுமையாக மறுப்பது கடினம்" என்று கூறினார்.

வாஜ்பாய் ஆட்சியில் இருந்த பாஜகவுக்கும் இப்போதுள்ள பாஜகவுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று சின்ஹாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “அப்போது இருந்த பாஜக செத்து போய்விட்டது. இப்போது நாட்டில் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. அசாதாரண சூழ்நிலையில் தேர்தல்கள் நடத்தப்படுகிறது. யாராவது ஒருவர் இந்து என்றால், அவர் முஸ்லீமுக்கு பயப்படுகிறார், யாராவது முஸ்லீமாக இருந்தால், அவர் இந்துவைக் கண்டு பயப்படுகிறார். சமூகம் வகுப்புவாத அடிப்படையில் பிளவுபட்டுள்ளது” என தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in