ஆதிக்கம் செலுத்திய கவுன்சிலரின் கணவர்: கோவையில் கொந்தளித்த சுகாதாரப் பணியாளர்கள்!

ஆதிக்கம் செலுத்திய கவுன்சிலரின் கணவர்: கோவையில் கொந்தளித்த சுகாதாரப் பணியாளர்கள்!

கோவையைச் சேர்ந்த கவுன்சிலரின் கணவர் ஒருவர் அதிகாரியின் இருக்கையில் அமர்ந்து, அதிகார தோரணையில் சுகாதார பணியாளர்களிடம் நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண் உள்ளாட்சி பிரநிதிகளின் கணவர்கள், உள்ளாட்சி பணிகளில் குறுக்கிடக் கூடாது எனத் தமிழக அரசு பலமுறை எச்சரிக்கை செய்துள்ளது. ஆனாலும் பெண் பிரநிதிகளின் கணவர்கள் அவர்களின் பணிகளில் ஆதிக்கம் செலுத்தி வருவது தொடர்கிறது. கோவை மாநகராட்சி 61-வது வார்டு உறுப்பினர் ஆதிமகேஸ்வரி. இவரது கணவர் திராவிட மணி என்பவர் நேற்று காலை சுகாதார அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சுகாதார ஆய்வாளர் அமரும் இருக்கையில் அமர்ந்த திராவிட மணி, சுகாதாரப் பணியாளர்களின் வருகைப் பதிவேட்டை எடுத்து ஆய்வு செய்துள்ளார். அதோடு விட்டுவிடாமல், சுகாதாரப் பணியாளர்களிடம் அதிகாரத் தோரணையில் பேசி, அவர்களிடம் அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் பணியாளர்கள் எந்தெந்த இடத்திற்குச் சென்று பணி செய்கிறார்கள் என்ற விவரங்களை தனக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் சுகாதாரப் பணியாளர்கள் அவர் மீது அதிருப்தி அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அம்பேத்கர் சுகாதார துப்புரவு சங்கத்தினர் மாநகராட்சியில் புகார் அளித்துள்ளனர். மேலும் இவரின் நடவடிக்கை குறித்து வீடியோ வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி ஆணையர் இது போன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in