நீர்த்துப் போகிறதா எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கு?

ஊழல் அதிகாரிகளை விசாரிக்கத் தடைபோடும் மர்மம் என்ன?
எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

அதிமுகவில் ஓபிஎஸ்சுக்கும் ஈபிஎஸ்சுக்கும் இடையே நடக்கும் அரசியல் அதிகார யுத்தத்துக்கு நடுவே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கு தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சைகளும் பரபரப்பைப் பற்றவைத்திருக்கின்றன.

அதிமுகவின் அசைக்க முடியாத பவர் சென்டர்களில் ஒருவராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. ஈபிஎஸ்சின் நிழல் என வர்ணிக்கப்படும் இவர், கடந்த ஆட்சியில் டெண்டர்கள் மூலம் 811 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஆட்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக இருந்த வேலுமணி, தற்போது பேரவையில் அதிமுக கொறடாவாக இருக்கிறார்.

வேலுமணி தனது பதவியைப் பயன்படுத்தி சென்னை மாநகராட்சியில் ரூ.464 கோடி, கோவை மாநகராட்சியில் ரூ.346.81 கோடி ஊழல் செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையும் நடத்தினர்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்துவிட்ட நீதிமன்றம், வேலுமணியின் மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத் துறை, அறப்போர் இயக்கம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனிடையே, வேலுமணி தொடர்பான முறைகேடுகளில் மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அவர்களை விசாரிக்க தமிழக அரசிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது. ஆனால், இதுவரை தமிழக அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இப்பிரச்சினைத் தொடர்பாக டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் தமிழக அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினர். அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வரான பின்பு வேலுமணி மீதான புகாரின் மீது ஏன் மிதமான போக்கைக் கடைபிடிக்கிறார் என்ற கேள்விகளும் எழுந்தன.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்களில் நாம் பேசியபோது, ”திமுகவும் அறப்போர் இயக்கமும் தந்த புகார்களின் அடிப்படையில் தான் வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. வேலுமணியின் சகோதரர் அன்பரசன், பினாமியான சந்திரசேகர் ஆகியோர் பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களின் முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டது. வேலுமணியின் அனைத்து வித ஒப்பந்தங்களையும் சந்திரசேகர் தான் கவனித்து வந்துள்ளார். அவருக்கு மட்டும் 12 உதவியாளர்கள் இருந்துள்ளனர். இவர்கள் வேலுமணி பெயரில் நடத்திய திருவிளையாடல்கள் எல்லாம் திரட்டப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியை சந்திரசேகரும், கோவையை அன்பரசனும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து முறைகேடுகளை அரங்கேற்றி இருக்கிறார்கள். சோதனைகளின் போது இது தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன. முக்கியமாக, பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள தொழிலதிபர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. இதன் அடிப்படையிலயே அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அரசிடம் அனுமதி கோரியிருந்தோம். விரைவில் அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்கள்.

ஜெயராம் வெங்கடேசன்
ஜெயராம் வெங்கடேசன்

தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய கடிதத்தில் விஜய கார்த்திகேயன், கந்தசாமி, பிரகாஷ், மதுசூதனன் ரெட்டி ஆகிய நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 12 அதிகாரிகளை விசாரிக்க உரிய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாகவே தமிழக அரசு அனுமதி மறுப்பதாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஜெயராம் வெங்கடேசன், “வேலுமணியின் டெண்டர் முறைகேடுகளில் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர். அதனால் இந்த வழக்கில் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விசாரிக்க அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் அனுப்பி 8 மாதங்களாகியும் அரசு ஒப்புதல் வழங்கவில்லை. அப்படியென்றால் அந்த அதிகாரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இருக்கிறது. இதன் மூலம் வேலுமணி மீதான வழக்கையே நீர்த்துப்போகச் செய்யக்கூடிய வேலை நடக்கிறதோ என சந்தேகிக்கத் தோன்று கிறது. அதற்காக அரசின் நோக்கம் வேலுமணியைக் காப்பாற்றுவது என்று சொல்லமாட்டேன். ஆனால், அதிகாரிகளைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தால் லஞ்ச ஒழிப்புத்துறை தன்னிச்சையாக செயல்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின். அப்படியானால் இப்போது அவர்களை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டியதுதானே... எதற்காக 8 மாதங்கள் காத்திருக்க வைக்கவேண்டும்? 12 அதிகாரிகள் மீதான விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதால் வேலுமணி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதமாகிறது. ஆட்சிக்கு வந்ததும் வேலுமணியைச் சிறைக்கு அனுப்புவோம் என்று சொன்னார் ஸ்டாலின். ஆனால், ஓராண்டாகியும் அதைச் செய்யாமல் இருப்பதுடன் வழக்கை விசாரிக்கவும் விடாமல் தாமதப்படுத்துவது முறையல்ல.

கடந்த பல ஆண்டுகளாக எந்த ஐஏஎஸ் அதிகாரி மீதும் ஊழல் வழக்குப் பதிவுசெய்யப்படவில்லை. அதனால் குற்ற வழக்குகளில் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுவதும், அதிகாரிகள் தப்பித்துக் கொள்வதும் தொடர்கிறது. வேலுமணி வழக்கில் தொடர்புடைய அரசியல்வாதிகள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

இதுகுறித்து திமுக வழக்கறிஞர்கள் தரப்பில் பேசியபோது, “வேலுமணியின் டெண்டர் முறைகேடுகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையாளராக இருந்த பிரகாஷ், துணை ஆணையாளர்களாக இருந்த கந்தசாமி, மதுசூதனன் ரெட்டி, கோவை மாநகராட்சி ஆணையாளராக இருந்த கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளராக இருந்த நந்தகுமார், முதன்மைப் பொறியாளராக இருந்த புகழேந்தி, தலைமைப் பொறியாளர் செந்தில்நாதன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருக்கிறது.

இதுதொடர்பாக இரண்டாவது முறையாக வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையின் போது 2 ஆவணங்கள் எடுக்கப்பட்டு அவற்றிக்குப் பதில் போலியான ஆவணங்கள் வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அத்துடன் டெண்டர் முறைகேட்டில் யார், யாருக்கு எந்த அளவு பங்கு உள்ளது என்று வகை பிரிக்கப்படாமலும் உள்ளது. என்றாலும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் அதிகாரிகளும் தப்பிக்க முடியாது. வேலுமணியும் கட்டாயம் சிறை செல்வார்” என்றார்கள்.

“சொல்லாததையும் செய்வோம்” என்று அடிக்கடி சொல்லிவரும் முதல்வர் ஸ்டாலின், வேலுமணி விவகாரத்தில் சொன்னதைச் செய்ய தடையாக இருக்கமாட்டார் என்று நம்புவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in