
மதுரையில் நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் திமுகவினர் மத்தியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுள்ளார். தனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று சொன்ன ஸ்டாலின், அவரது மகனை அமைச்சராக்கலாமா என அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் வாரிசு அரசியலை விமர்சிக்கும் வகையில், மதுரையைச் சேர்ந்த நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர் திமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் முழுவதும் பிரம்மாண்டமான வகையில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், அரசியல் வாரிசுகளான ராகுல் காந்தி, ஸ்டாலின், துரை வைகோ, அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன், " எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசே" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. உதயநிதியை குறிவைத்து விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர், மதுரை திமுகவினர் மத்தியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.