அரசுப் பணியாளர் நியமனத்தில் ஆளுங்கட்சி தலையீடு சர்ச்சை: முற்றுப்புள்ளி வைத்து அதிரடி காட்டிய ஆட்சியர்!

சிவபத்மநாபன் / தென்காசி ஆட்சியர் ஆகாஷ்
சிவபத்மநாபன் / தென்காசி ஆட்சியர் ஆகாஷ்

தென்காசியில் நேரடி நியமன அரசுப்பணிகளில் திமுகவினரை நியமிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலினிடம் பேசிவிட்டேன் என திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தென்காசி ஆட்சியர் தன் ட்விட்டர் பக்கத்தில் தேர்வாகி இருப்போரின் பட்டியலையும், அவர்களின் தகுதியையும் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள 38 ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடம், 35 கிராம நிர்வாக உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடந்தது.

இந்நிலையில் கடந்த 9-ம் தேதி திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாபன், “ரேஷன் கடையில் 38 காலிப்பணியிடங்கள் உள்ளன. 4000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. கிராம நிர்வாக உதவியாளர் பதவிக்கு 3500 விண்ணப்பங்கள் என்னிடம் உள்ளன. இதை ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் முக்கியப் பொறுப்புகளை வகிப்போருக்கு ஒரு இடம், கட்சிக்கு உழைத்த கிளைச் செயலாளர்கள், வார்டு செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன ”என்று பேசினார். இந்த பேச்சு வைரலான, நிலையில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக தலைவர் அண்ணாமலையும் தன் ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஆட்சியர் ஆகாஷிற்கும் இது சிக்கலை ஏற்படுத்தியது. ஆட்சியர், மாவட்ட செயலாளர் சிவபத்மநாபனின் உத்தரவை கேட்கவில்லை என்றும், நேர்மையான வகையில் மட்டுமே நியமனம் நடக்கும் எனக்கூறியதாகவும் சர்ச்சை வெடித்தது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவை நடக்கும் நாள் என்பதாலும், ஆளும்கட்சியின் முக்கியப்புள்ளிகள் அனைவரும் சென்னையில் முகாமிட்டு இருப்பதாலும் ஆட்சியர் இன்று இந்த நேரடி நியமன வேலைக்குத் தேர்வான தகுதியானோர் பட்டியலை வெளியிட்டு விட்டார். இதை தன் ட்விட்டர் பக்கத்திலும் தென்காசி ஆட்சியர் ஆகாஷ் பகிர்ந்துள்ளார். இதில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் கொடுத்த பட்டியல் புறக்கணிக்கப்பட்டு, தகுதியான நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தென்காசி மாவட்ட திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in