‘அப்போ பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இல்லையா?’ - பாயும் எதிர்க்கட்சிகள்

‘அப்போ பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இல்லையா?’ - பாயும் எதிர்க்கட்சிகள்

டெல்லியைத் தாண்டி பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்துவிட்ட ஆம் ஆத்மி கட்சி, ரொம்பவே உற்சாகத்துடன் செயல்பட்டுவருகிறது. அதேசமயம், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலின் அதீத ஆர்வம் சில சமயம் ஆர்வக்கோளாறாகிவிடுகிறது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானே பங்கேற்காத கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் கலந்துகொண்டு அம்மாநில உயரதிகாரிகளுடன் உரையாற்றியது எதிர்க்கட்சிகளுக்குப் புதிய ஆயுதமாகக் கையில் சிக்கியிருக்கிறது.

நேற்று டெல்லியில் பஞ்சாப் மின்வாரியத்தின் உயரதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் தலைமைச் செயலர், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால், முதல்வர் பகவந்த் மான் அதில் கலந்துகொள்ளவில்லை. மாறாக, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கலந்துகொண்டு உரையாற்றினார்.

பஞ்சாப் எதிர்க்கட்சிகள் இதைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றன.

“பகவந்த் மான் பங்கேற்காத கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவாலின் அழைப்பின் பேரில் ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இது அசல் முதல்வர் யார் என்பதையும், டெல்லியிலிருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் பஞ்சாபில் ஆட்சி நடக்கிறது என்பதையும் காட்டுகிறது” என்று ட்வீட் செய்திருக்கும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, “இது கூட்டாட்சியைப் பட்டவர்த்தனமாக மீறும் செயல். பஞ்சாபின் பெருமையை அவமதிக்கும் செயல். இருவரும் விளக்கமளிகக் வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

“எதிர்பார்த்திருந்தது போலவே மோசமான விஷயம் நடந்திருக்கிறது. எதிர்பார்க்கப்பட்டதைவிட முன்னதாகவே பஞ்சாபை அர்விந்த் கேஜ்ரிவால் தன்னுடையதாக்கிக் கொண்டிருக்கிறார். பகவந்த் மான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்பது ஏற்கெனவெ முடிவுசெய்யப்பட்ட விஷயம். இப்போது, டெல்லியில் பஞ்சாப் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தியதன் மூலம் அதை அர்விந்த் கேஜ்ரிவால் நிரூபித்துவிட்டார்” என்று பஞ்சாப் முன்னாள் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான கேப்டன் அமரீந்தர் சிங் ட்வீட் செய்திருக்கிறார்.

எதிர்ப்பு வலுத்திருக்கும் நிலையில், “அர்விந்த் கேஜ்ரிவால் எங்கள் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர். எப்போதுமே அவரது வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்கிறோம். பஞ்சாபின் நலனுக்காக ஆக்கபூர்வ நவடிக்கையாக அதிகாரபூர்வமற்ற முறையில் கூட்டம் நடத்தப்பட்டிருந்தால், எதிர்க்கட்சிகள் அதை விமர்சிக்கக் கூடாது. ஆதரிக்க வேண்டும்” என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் மல்விந்தர் சிங் கூறியிருக்கிறார்.

ஆனால், இதுகுறித்து அர்விந்த் கேஜ்ரிவாலோ, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களோ இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

Related Stories

No stories found.