சாம் பிட்ரோடாவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி... பாஜக கடும் கண்டனம்!

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களின் நிறம் குறித்த பேச்சுக்கள் தொடர்ந்து  சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. 

சாம் பிட்ரோடா
சாம் பிட்ரோடா

காங்கிரஸ் கட்சியின் அயல்நாட்டு பிரிவு தலைவராக இருந்தவர் சாம் பிட்ரோடா. இவர், " இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டை நாம் ஒன்றுபடுத்த முடியும். கிழக்கு இந்தியாவில் இருப்பவர்கள் சீனர்கள்போல் இருக்கிறார்கள்.  மேற்கில் இருப்பவர்கள் அரேபியர்கள் போன்றும், வடக்கில் இருப்பவர்கள் வெள்ளையர்கள் போன்றும் தெரிகிறார்கள். தெற்கில் இருப்பவர்கள் ஆப்பிரிக்கர்கள்போல் இருக்கிறார்கள்.

எனினும் நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். வெவ்வேறு மொழிகளையும், வெவ்வேறு மதங்களையும், பழக்க வழக்கங்களையும், உணவு வகைகளையும் நாம் மதிக்கிறோம்" என பேசியிருந்தார். ஆனால் அவருடைய இந்த பேச்சு பாஜக தரப்பில் பெரிது படுத்தப்பட்டது. 

இந்த பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் பிரிவினை  மனப்பான்மையை அவர் வெளிப்படுத்தி உள்ளார் என்று  மோடி விமர்சித்தார். ஆனால், அவர் பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது. அத்துடன் சாம் பிட்ரோடா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தநிலையில் இதுகுறித்து  காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முக்கிய தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியுள்ள கருத்துக்களும்  தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

"புரோட்டோ ஆஸ்திரேலாய்டு (கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள்), மங்கோலாய்டு (கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள்), நீக்ரிட்டோக்கள் (கருப்பு நபர்கள்) இந்தியாவில் உள்ளனர். இந்தியாவின் மக்களான  அவர்களுடைய பழக்க வழக்கங்கள் வெவ்வேறானவையாக உள்ளன. யாரோ சிலர் கூறுவது என்பது  அவருடைய கருத்து.  ஆனால், சிலர் வெள்ளையராகவும், சிலர் கருப்பாகவும் உள்ளனர்'  என்றும் அவர் கூறியுள்ளார். 

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

இவருடைய  இந்த பேச்சுகள் பிட்ரோடாவை பாதுகாக்கும் முயற்சியாக உள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த ஷெஜாத் பூனவல்லா கண்டனம் தெரிவித்துள்ளதுடன், 2022-ம் ஆண்டு ஜூலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றி சவுத்ரி கூறிய சர்ச்சையான கருத்துக்களை  மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார். 

'ஆதிர் ரஞ்சன் தன்னுடைய எல்லைகளைக் கடந்து விட்டார். சாம் பிட்ரோடாவை பாதுகாக்கும் வகையில் இந்தியர்களை வெள்ளையர்கள், கருப்பர்கள்  என அழைக்கிறார். இரு வார்த்தைகளுமே அவமதிக்க கூடியவை. அவர் கூறியவை எல்லாம் சாம் பிட்ரோடாவின் வார்த்தைகள். காங்கிரசின் சிந்திக்கும் முறையாக இது உள்ளது.  சாம்  கூறிய விஷயங்களை அவர் நியாயப்படுத்துகிறாரா? கடந்த காலத்தில் முர்முவை பற்றி கூறிய ஆதிர் ரஞ்சனை அவர்கள் வெளியேற்றுவார்களா?' என ஷெஜாத் கேட்டுள்ளார். ஆனாலும், ஆதிர் ரஞ்சனின் பேச்சுகள் பற்றி காங்கிரஸ் கட்சி  கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in