ரேஷனில் தரம் குறைந்த பருப்பு சப்ளைக்கு ஒப்பந்தம் : மத்திய - மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

ரேஷனில் தரம் குறைந்த பருப்பு சப்ளைக்கு ஒப்பந்தம் : மத்திய - மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு தரம் குறைந்த பொருட்களை சப்ளை செய்த நிறுவனத்திற்கே, ரேஷன் கடைகளுக்கான துவரம் பருப்பு சப்ளை செய்யும் உள் ஒப்பந்தம் வழங்கிய மத்திய அரசு நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக 14 ஆயிரத்து 614 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசின் தேசிய வேளான் விற்பனை கூட்டமைப்புடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கு தரம் குறைந்த பொருட்களை சப்ளை செய்த கேந்திரிய பந்தர் என்ற நிறுவனத்துக்கு தேசிய வேளாண் விற்பனை கூட்டமைப்பு உள் ஒப்பந்தம் வழங்கியது. இதை எதிர்த்தும், மத்திய அரசு நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில்," தேசிய வேளாண் பொருள் விற்பனை கூட்டமைப்பு மற்றும் கேந்திரிய பந்தர் நிறுவனங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சப்ளை செய்த பருப்பை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் உள்ள கிட்டங்கிகளில் உள்ள பருப்பின் மாதிரிகளைச் சேகரித்து அரசு ஆய்வகங்களில் தரப் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in