அதிரடி ரெய்டுகள்: ஆக்‌ஷன் எடுக்கவா... அரட்டிவைக்கவா?

அதிரடி ரெய்டுகள்: ஆக்‌ஷன் எடுக்கவா... அரட்டிவைக்கவா?

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகளில் மீண்டும் புதிய வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்திக் களைத்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக திமுக தரப்பில் சொல்லப்படும் நிலையில், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கொந்தளிக்கிறது அதிமுக வட்டாரம்.

அதிமுகவில் தற்போது ஈபிஎஸ்சுக்கு அடுத்த நிலையில் இருப்பது எஸ்.பி.வேலுமணிதான். கொங்கு மண்டலம் முழுக்கவும் செல்வாக்கு வைத்திருக்கும் இவர், தமிழகம் முழுவதுமே ஈபிஎஸ்சுக்கு ஆதரவான ‘லாபி’யைக் கட்டமைத்தவர். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ்சின் பக்கம் கட்சியினரை உரிய முறையில் ’கவனித்து’ நிற்கவைத்ததில் பெரும்பொறுப்பை எடுத்துக் கொண்டவர் வேலுமணிதான். இவரைப் போலவே முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் மத்திய மண்டலத்தில் ஈபிஎஸ்சின் கரத்தை வலுப்படுத்தி வருபவர். இந்த இருவரையும் குறிவைத்து மீண்டும் மீண்டும் ரெய்டு வைபவங்கள் நடத்தப்படுவது தான் சாமானியர் மத்தியிலும் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.

குற்றச்சாட்டுகள் என்ன?

சி.விஜயபாஸ்கர் தேசிய மருத்துவக்குழும விதிகளுக்கு முரணாக, திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு மருத்துவக் கல்லூரி தொடங்கவும், மருத்துவமனைக்கான தகுதிச் சான்றிதழ் வழங்கியதிலும் முறைகேடு செய்திருப்பதாக அவர் சம்பந்தப்பட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.

சி.விஜயபாஸ்கர்
சி.விஜயபாஸ்கர்

அதேபோல, எஸ்.பி.வேலுமணி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தபோது கிராமங்களில் தெருவிளக்குகளை எல்ஈடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்து நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கினார். இதனால் அரசுக்கு 500 கோடி ரூபாய் வரை இழப்பு எனச் சொல்லி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் அவருக்குத் தொடர்புடைய 31 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

கைப்பற்றப்பட்டவை

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.32.98 லட்சம் ரொக்கம். 1,228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளிப் பொருட்கள், 4 சக்கர வாகனங்கள் 10, மற்றும் 316 ஆவணங்கள், 2 வங்கி பெட்டகச் சாவிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.18.37 லட்சம் ரொக்கம், 1,872 கிராம் தங்க நகைகள், 8.28 கிலோ வெள்ளி, 120 ஆவணங்கள், 4 வங்கிப் பெட்டக சாவிகள். ஒரு ஹார்ட் டிஸ்க், ஒரு பென்டிரைவ், 2 ஐபோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

வேலுமணி
வேலுமணி

தொடர்ந்து குறிவைக்கப்படும் அமைச்சர்கள்:

எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது இது முதல்முறை இல்லை. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் 60 இடங்களில் இதற்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது. அதுபோல அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 57 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இப்போது நடந்திருப்பது வேலுமணி சந்தித்திருக்கும் 3-வது ரெய்டு. அதுபோல விஜபாஸ்கர் மீதும் ஏற்கெனவே சொத்துக் குவிப்பு வழக்கு பதிவுசெய்யப்பட்டு 43 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல முன்னாள் அமைச்சர் தங்கமணி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக கடந்த டிசம்பரில் 69 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதே வழக்கில் இந்த ஆண்டு ஜூலை மாதமும் சோதனை நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ், கே.சி.வீரமணி ஆகியோர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவுசெய்யப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டது.

அடுத்ததாக ஈபிஎஸ் மீதான நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கிலும் தமிழக அரசு வேகம்காட்டி வருகிறது. “இந்த ரெய்டுகளால் எங்களுக்கு பாதகம் ஒன்றுமில்லை” என்று அதிமுக தலைவர்கள் வெளிப்படையாகச் சொன்னாலும், தொண்டர்கள் இதனால் சற்று சோர்ந்துபோய் உள்ளனர் என்பதுதான் உண்மை.

ஈ

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சென்னை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் கோவை சத்யன், “ அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டுகள் என்பது முழுக்கவும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான். முழுக்க முழுக்க ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை திசை திருப்பும் நோக்கில் திமுக அரசு இந்த ரெய்டுகளை நடத்தி வருகிறது. மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக மிக வலுவாக உள்ள கொங்கு மண்டலத்தில் போராட்டத்தை நீர்த்துப் போகச்செய்யவே வேலுமணியின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. அதேபோல அதிமுக வலுவாக உள்ள புதுக்கோட்டையில் போராட்டத்தை திசை திருப்ப விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஒருவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினால், அங்குள்ள ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றி அதுகுறித்து விசாரணை நடத்துவார்கள். அப்படி இருக்கையில் ஒரே வீட்டில் ஏன் பலமுறை சோதனை நடத்தப்படுகிறது. அதேபோல 40 இடங்கள், 50 இடங்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பில்லாத இடங்களிலெல்லாம் சோதனை நடத்தி, மக்களிடம் அதிக இடங்களில் சோதனை நடத்துவதுபோல மாய பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். சம்பந்தமே இல்லாத நிறுவனங்களில் சோதனை நடத்தி அதையெல்லாம் முன்னாள் அமைச்சர்களுடன் தொடர்புபடுத்த மெனக்கிடுகிறார்கள். இத்தனை இடங்களில் சோதனைகள் நடத்தினாலும் முடிவில், ரூ.5 லட்சம், ரூ.6 லட்சம் பணத்தை மட்டுமே கைப்பற்றியதாகச் சொல்கிறார்கள்.

கோவை சத்யன்
கோவை சத்யன்

தமிழக அரசியலில் ரெய்டுகள் என்பது புதிதில்லை. எம்ஜிஆர் - கருணாநிதி காலத்திலேயே ஆரம்பித்த ஊழல் புகார் ரெய்டுகள், கருணாநிதி - ஜெயலலிதா காலத்தில் தீவிரமடைந்தது. 1991 – 96-ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, 1996-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு பல்வேறு வழக்குகளை போட்டது. இந்த வழக்குகளின் விசாரணையின் முடிவில், முன்னாள் அமைச்சர்களான அரங்கநாயகம், செல்வகணபதி, இந்திரகுமாரி உள்ளிட்டோருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. ஏன், ஜெயலலிதாவே இந்த வழக்குகளால் சிறைசெல்லும் சூழலும் உருவானது.

அதேபோல 2006 – 11 வரையிலான திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலர் மீது, 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் எண்ணற்ற வழக்குகள் தொடரப்பட்டது. இதில் சில அமைச்சர்கள் கைதும் செய்யப்பட்டனர். அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குகளை சந்தித்துவரும் பலரும் தற்போதைய ஆட்சியில் அமைச்சர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தபோது அவரது வீட்டின் முன்பாக அமர்ந்திருந்த அதிமுக எம்எல்ஏ-க்கள்...
எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தபோது அவரது வீட்டின் முன்பாக அமர்ந்திருந்த அதிமுக எம்எல்ஏ-க்கள்...

இப்போதைய திமுக ஆட்சியில் இதுவரை பல முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டாலும், அது தொடர்பான மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ரெய்டுகளைத் தொடர்ந்து எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தான் இது அரசியல் பழிவாங்கலா அல்லது ஆதாரத்தின் அடிப்படையிலானதா என்பதை முடிவு செய்யும்” என்றார்.

அமைச்சர் பதவியில் இருந்தவர்கள் ஊழல் செய்திருந்தால் அது தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தி சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அடுத்து அமையும் அரசுக்கு இருக்கிறது. அதேசமயம், ஊழல் செய்தவர்களைத் தண்டிப்பதாகச் சொல்லி அடுக்கடுக்கான சோதனைகளை நடத்திவிட்டு மேல் நடவடிக்கை எடுப்பதில் காலம் கடத்துவது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுப்பதுடன் தவறுசெய்தவர்கள் தப்பிக்கவும் ஏதுவாக அமைந்துவிடும் என்பதையும் அதிகாரத்தில் இருப்பவர்கள் கவனத்தில் கொள்வது நல்லது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in