
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என தொடர் விடுமுறை வருவதால் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது என போக்குவரத்துக்கழகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால், அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகளும், பெங்களூரு, கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து 1,700 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் விடுப்பு எடுத்தால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் போக்குவரத்துக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘’தமிழ்நாட்டில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துனர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது. மீறி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'’ என குறிப்பிடப்பட்டுள்ளது.