ஆளுநருடன் மோதல்: மக்கள் பிரச்சினைகளை மறக்கடிக்கும் திமுகவின் உத்தியா?

ஆளுநருடன் மோதல்: மக்கள் பிரச்சினைகளை மறக்கடிக்கும் திமுகவின் உத்தியா?

ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் உச்சம் தொட்டுள்ளது. பேரவையில் ஆளுநர் நடந்துகொண்ட விதத்தை வைத்து அரசியல்களத்தைச் சூடாக்கி வருகின்றன திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும்!

மற்றொருபுறத்தில், “பேரவையில் முதல்வர் பேசிக்கொண்டு இருக்கும்போதே ஆளுநர் எவ்வளவு கம்பீரமாக வெளியேறினார் பார்த்தீர்களா?” என சமூகவலைதளங்களில் வலதுசாரிகள் ஆளுநரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதன் ஊடாக, ஆளுநர் - அரசு மோதல் என்பது அரசுக்கு எதிராக திரும்பி நிற்கும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்பும் முயற்சியே என்ற குரல்களும் சன்னமாக ஒலிக்கிறது!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் அத்தனைப் பிரச்சினைகள் இருக்கிறதா? என்றுகேட்டால் புலம்பித் தீர்க்கிறார்கள் பலரும். ஒருசோறு பதமாக ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்கிறார் குமரி மாவட்ட பாஜக இளைஞரணி பொருளாளர் சவார்க்கர்.

“திமுக ஆட்சியில் குமரிமாவட்டத்தில் மட்டும் 17 ஆயிரம் பேருக்கு முதியோர் பென்ஷன் நிறுத்தப்பட்டுள்ளது. கேட்டால், பென்ஷன் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து அதில் யாரெல்லாம் வங்கியில் பணம் இருப்பு வைத்திருக்கிறார்கள், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகை அடமானம் இருக்கிறது எனப் பார்த்து நீக்கியிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் பொய்சொல்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் பென்ஷனை ஆயிரம் ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தி உள்ளார்கள். அதில் தமிழகத்தில் குறைவான பயனாளிகளே இருப்பார்கள். ஆனால், அதிக பயனாளிகள் இருக்கும் முதியோர் பென்ஷனை கணிசமான எண்ணிக்கையில் குறைத்துவிட்டனர்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் அத்தியாவசியப் பொருள்களை சேர்ப்பதற்கே போராட்டம் நடத்த வேண்டிய சூழல் இருந்தது. போதாதுக்கு உதயநிதியை அமைச்சராக்கி அழகுபார்த்தது தொடங்கி, சீனியர் அமைச்சர்களே அவருக்காக காத்து நிற்கின்றனர். மின் கட்டண உயர்வு, பால் விலை ஏற்றம், சொத்துவரி உயர்வு என பலவிதத்திலும் பாதிக்கப்பட்டுக் கிடக்கும் மக்கள் மத்தியில் திமுக செல்வாக்கை இழந்துவிட்டது. அதையெல்லாம் மறைத்து மக்களை திசை திருப்ப, திராவிட நாடு, தமிழ்நாடு என ஏதேதோ பேசி மக்களைக் குழப்புகிறார்கள்” என்றார் சவார்க்கர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

“முந்தைய அதிமுக ஆட்சியில் ஏழைப்பெண்களுக்கு வழங்கப்பட்ட தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட திட்டங்களால் வீட்டுக்கு வீடு அரசின் நலத்திட்ட உதவியைப் பெறும் பயனாளிகள் இருந்தார்கள். இப்போது அந்தத்திட்டங்களை முடக்கிவிட்டு அறநிலையத்துறை மண்டபங்களில் திருமணம் நடத்த சலுகை கொடுக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கிராமங்களில் அம்மா மருத்துவமனை இருந்தது. மக்கள் அதன் மூலம் மருத்துவம் பார்த்துக்கொண்டனர். இல்லம் தேடி மருத்துவம் என்ற பெயரில் அந்தத் திட்டத்தையும் சிதைத்து விட்டார்கள். அவர்கள் கைவைக்காமல் இருப்பது அம்மா உணவகங்கள் மட்டும்தான்” என்றும் சொல்கிறார்கள்.

திமுகவுக்கு சவாலாக இருப்பது இவைமட்டுமல்ல... தங்களுக்கு எதிராகக் கொடைபிடிக்கும் இந்துத்துவ சிந்தனையாளர்களையும் சமாளிக்க வேண்டி இருக்கிறது. இடையில், தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலக்கிய விவகாரம், திமுகவினரே பெண் காவலர்களிடம் பாலியல் சீண்டலில் ஏற்பட்ட விவகாரம், அமைச்சர்களும் மூத்த நிர்வாகிகளும் வாய்க்கு வந்தபடி எதையாவது பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது உள்ளிட்ட சமாச்சாரங்களுக்கும் சப்பைக்கட்டு கட்ட வேண்டிய கட்டாயமும் சங்கடமும் திமுக அரசுக்கு இருக்கிறது.

நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதைக் காட்ட முதல்வரும், அமைச்சர்களும் ரொம்பவே மெனக்கிடுகிறார்கள். ஆனால், “என் மனைவி கிருத்திகாவே கிறித்தவர்தான்” எனப் பேசிவிட்டுப்போகிறார் முதல்வரின் பிள்ளை உதயநிதி ஸ்டாலின். “படுக்கை அறையும், பாத்ரூமும் தவிர அனைத்தும் பொது இடங்கள்தான். எனவே, அனைவரும் கவனமாக இருங்கள்” என்ற முதல்வர் பொதுவெளியிலேயே எச்சரிக்கிறார். ஆனால், அதையெல்லாம் திமுகவினர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் பொதுவெளியில் அமைச்சர்கள் ஏடாகூடமாக பேசுவதும் நடந்துகொள்வதும் இன்னமும் தொடர்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

இவை எல்லாம் அரசுக்கு எதிரான மனநிலைக்கு மக்களைத் திருப்பிக் கொண்டிருக்கும் நிலையில் தான் அந்த திசையிலிருந்து மக்களை வேறுபக்கமாக திருப்ப ஆளுநர் எதிர்ப்பு என்ற அஸ்திரத்தை திமுக கையில் எடுத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் ஆமோதிக்கிறார்கள். ஒருவகையில் பார்த்தால் இந்த ஆயுதம் திமுகவுக்கு நன்றாகவே கைகொடுக்கிறது. பிரதான பிரச்சினைகளை எல்லாம் மக்கள் கிட்டத்தட்ட மறந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆளுநர் பொது இடங்களில் பேசுவதை கேட்டு திமுக ரியாக்ட் செய்யாமல் இருந்தாலே அனைத்து சர்ச்சைகளும் அடங்கிவிடும். ஆனால், அப்படியில்லாமல் பதிலுக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறது திமுக. தமிழ்நாடு என்றாலும் தமிழகம் என்றாலும் பொருள் ஒன்றுதான் என்று சொல்லிவிட்டு எளிதாக இந்தப் பிரச்சினையை திமுக கடந்திருக்கலாம். ஆனால், அப்படி இல்லாமல் இந்த விவகாரத்தை வைத்து தமிழ் உணர்வாளர்களை எல்லாம் ஓரணியில் திரட்டும் முயற்சியில் இறங்கிவிட்டது திமுகவும் திமுக அரசும் என்று சொல்வோரும் இருக்கிறார்கள்.

இதுகுறித்தெல்லாம் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரத்திடம் பேசினோம். “சட்டப்பேரவை விதி 17 ஆளுநர் பேசுவதற்கு முன்போ, பின்போ அந்த உரையில் குறுக்கீடு செய்யவோ, கருத்துக்கேட்கவோ கூடாது என தெளிவாகக் கூறியுள்ளது. ஆளுநர் உரைக்கு மறுநாள் தான் அதைப்பற்றி சபாநாயகர் மூலம் பேசவேண்டும். ஆனால், முதல்வர் ஸ்டாலின் இந்த மரபை மீறி, ஆளுநர் அவையில் இருக்கும் போதே தானாகவே தீர்மானத்தைக் கொண்டு வருகிறேன் என்றார். அப்படி சபை மரபை முதல்வர் மீறியதால் தான் ஆளுநர் வெளியேறும் சூழல் எழுந்தது.

அவை மரபுப்படி, அவை முன்னவர் எழுந்து சபாநாயகரிடம் அனுமதிகேட்க வேண்டும். அதன்பின்பு தான் பேசமுடியும். முதல்வருக்கு அந்த மரபு தெரியாமல் தானே எழுந்து பேசுகிறார். இதில் சபாநாயகரின் உரிமையை முதல்வரே பறித்துள்ளார். இந்த விஷயத்தில் திமுகவினர் செய்தது ஜனநாயகப் படுகொலை. இப்படி தவறை எல்லாம் தங்கள் பக்கம் வைத்துக்கொண்டு, மக்கள் பிரச்சினைகளை திசை திருப்ப ஆளுநர் விவகாரத்தை ஊதிப் பெரிதாக்குகிறார்கள்” என்றார் அவர்.

ஆனால் திமுகவினரோ, “ஆளுநர் தமிழ் மக்களின் உணர்வுகளோடு மோதுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். தமிழ்நாடு எனப் பெயர்வைக்க அண்ணா செய்த முயற்சிகளை நாடு அறியும். பேரவையில் தமிழ்நாடு வாழ்க என வைத்த வாதங்கள் வாழ்க... வாழ்க என எழுந்த கோஷங்கள் இன்றும் வரலாற்றில் நிற்கும் காட்சி. ஆனால் ஆளுநர், தமிழ்நாடு இல்லை தமிழகம் என்கிறார். தமிழக அரசின் இலச்சினை இல்லாமல் பொங்கல் விழா அழைப்பிதழை அச்சடிக்கிறார். இப்படியெல்லாம் மாநில உரிமைகள் பறிக்கப்படும்போது எப்படி அமைதி காக்கமுடியும்?” என சூடாகிறார்கள்.

பாஜகவின் ஊதுகுழல் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகி இருக்கும் ஆளுநர். திராவிட மாடல் என்று சொல்லி வார்த்தைக்கு வார்த்தை மாநில அரசியலையும், கூட்டாட்சியையும் மையப்படுத்தும் முதல்வர் - இவர்களுக்குள் நடக்கும் வார்த்தை யுத்தத்தால் சாமானிய மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இதையெல்லாம் தாண்டி மக்களுக்கு செய்ய வேண்டிய நலத்திட்டங்களில் இரு தரப்பும் இத்தனை மெனக்கிடலைக் காட்டினால் தானாகவே தலை நிமிருமே தமிழகம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in