`தங்கத்தமிழ்செல்வனை கலங்கப்படுத்த நடந்த சதி'

ஆடியோ லீக் குறித்து நகராட்சித் தலைவர் விளக்கம்
`தங்கத்தமிழ்செல்வனை கலங்கப்படுத்த நடந்த சதி'

கட்சி கட்டுப்பாட்டை மீறி, தேனி நகராட்சித் தலைவராக வெற்றிபெற்ற ரேணுப்பிரியா கவுன்சிலர்களை கூட்டத்துக்கு வரவழைப்பதற்காகப் பேசிய பண பேர ஆடியோ லீக்கான விவகாரத்தில், "இது திமுகவுக்கும், மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வனுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட சதி" என்று ரேணுப்பிரியா விளக்கமளித்திருக்கிறார்.

தேனி நகராட்சித் தலைவர் பதவி திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், நகர் செயலாளர் பாலமுருகன் தன் மனைவி ரேணுப்பிரியாவை கட்சி கட்டுப்பாட்டை மீறி தலைவராக்கினார். கட்சி எச்சரித்தும் அவர் பதவி விலகாததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்தச் சூழலில் கடந்த வாரம் தேனி நகராட்சியின் முதல் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்காமல் திமுக கவுன்சிலர்கள் 10 பேர் உள்பட 21 பேர் புறக்கணித்தனர்.

அந்த கூட்டத்துக்கு வரச்சொல்லி கவுன்சிலர்களுக்கு நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா போன் செய்து பேசிய, குரல் பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. அந்த ஆடியோவில் நகராட்சித் தலைவருடன் பேசும் 29-வது வார்டு திமுக கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரி, "நகராட்சித் தலைவர் தேர்தலில் உங்களுக்கு ஓட்டுப்போட்டால் தருவதாகச் சொன்ன பணத்தை இன்னும் முழுதாகக் கொடுக்கவில்லை. அந்தப் பணத்தைத் தரும்வரையில் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என எல்லா கவுன்சிலர்களும் சேர்ந்து முடிவு செய்திருக்கிறோம்" என்கிறார். அதற்கு தலைவர், "மொத்தப் பணத்தையும் தேர்தலுக்கு முன்பாகவே மாவட்டச் செயலாளரிடம் (தங்கத்தமிழ்செல்வன்) கொடுத்துவிட்டோம். துணைத் தலைவர் முடிவு செய்யப்பட்ட பிறகு நாங்கள் தரவேண்டிய பணத்தை தருகிறோம்" என்று சொல்கிறார்.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா இன்று ஒரு குரல் பதிவை வாட்ஸ்அப் வாயிலாக பத்திரிகையாளர்களுக்கும், மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் உள்ளிட்ட திமுகவினருக்கும், கவுன்சிலர்களுக்கும் அனுப்பியுள்ளார். அதில் அவர், "முதல் நகராட்சி கூட்டத்துக்கு அழைப்பதற்காகத்தான் 29-வது வார்டு கவுன்சிலர் சந்திர கலா ஈஸ்வரிக்கு போன் செஞ்சேன். ஆனா, அவங்க உள்நோக்கத்துடன் கால் ரிக்கார்டிங் செய்தது எனக்குத் தெரியாது. சந்திர கலாதான் முதலில் கான்ட்ராக்ட், கமிஷன் தேர்தல் செலவுக்குப் பணம் என்று பேச்செடுத்து அதை ரிக்கார்டு செய்து சமூக வலைதளத்தில் பரப்பிட்டு இருக்காங்க. என்னையையும் நம்ம கட்சியையும் (திமுக), நம்ம மாவட்ட தலைமையையும் (தங்கத்தமிழ்செல்வன்) கலங்கப்படுத்தும் நோக்கத்தோடுதான் இதை சமூக வலைதளத்தில் பரப்பிட்டு இருக்காங்க" என்று கூறியுள்ளார்.

இந்த ஆடியோவும் தேனி மாவட்டம் முழுக்கப் பரவியிருக்கிறது. தேனி நகராட்சியில் வென்று ஏதாவது மக்கள் பிரச்சினை பற்றிப் பேசுவார்கள் என்று பார்த்தால், கமிஷனுக்காக கவுன்சிலர்கள் இப்படிச் சண்டை போடுகிறார்களே என்று மக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் திமுகவுக்குள்ளேயே ஏற்பட்டிருக்கும் கோஷ்டி மோதலையும் இந்த ஆடியோ அம்பலப்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.