
மேற்கு வங்க மாநிலத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்படுவதாகவும், இதன் ஒரு பகுதியாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
ஊழல் வழக்குகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தவறு செய்தவர்களுக்கு அவற்றைத் திருத்த வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "மாநிலத்திற்கு எதிராக ஒரு சதித் திட்டம் தீட்டப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் திரிணமூலுக்கு எதிராக தீங்கிழைக்கும் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஒரு நபர் ஏதேனும் தவறு செய்திருந்தால், அந்த தவறுகளை சரிசெய்ய அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். யாராவது ஏதேனும் தவறுகளில் ஈடுபட்டால், சட்டம் அதன்மீது நடவடிக்கை எடுக்கும். ஆனால் இங்கு ஒரு ஊடக விசாரணை நடக்கிறது" என்று கூறினார்.
மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் திரிணமூல் எம்.எல்.ஏ மாணிக் பட்டாச்சார்யாஆகியோர் ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் கைது அமலாக்கத்துறையால் செய்யப்பட்டுள்ளனர். திரிணமூலின் மூத்த தலைவரான அனுப்ரதா மோண்டல் கால்நடை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.