அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு: தமிழகத்தில் 15 பேர் கைது

அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு: தமிழகத்தில் 15 பேர் கைது

தமிழகத்தில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 22-ம் தேதி என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 11 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இதனைக் கண்டித்து பல இடங்களில் அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக கோவையில் பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் அலுவலகங்கள் என 7 இடங்களில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், ஈரோடு, ராம நாதபுரம் போன்ற இடங்களில் பாஜக பிரமுகர்களின் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனையடுத்து பாட்டில்களில் பெட்ரோல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் கமாண்டோ படையினர், சிறப்பு அதிரடி படையினர் உட்பட ஆயிரக்கணக்கான போலீஸார் பலத்த பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட 100 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து பல பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக தமிழக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in