
தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா, தொடர்ந்து இரண்டாவது முறையாக மேகாலயா மாநில முதல்வராக இன்று பதவியேற்றார். மாநில சட்டசபையில் அவருக்கு 45 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.
தேசிய மக்கள் கட்சி(என்பிபி)யின் தலைவரான கான்ராட் கே சங்மா, மேகாலயா முதல்வராக இன்று பதவியேற்றார். என்பிபியைச் சேர்ந்த பிரஸ்டோன் டின்சாங் மற்றும் ஸ்னியாவ்பலாங் தார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்,
மேகாலயா ராஜ்பவனில் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். பதவியேற்பு விழாவில் தேசிய மக்கள் கட்சியின் 7 பேரும், யுடிபியைச் சேர்ந்த இருவருக்கும், பாஜக மற்றும் எச்எஸ்பிடிபி கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் ஆளுநர் பாகு சவுகான் அமைச்சர்களாக ரகசியகாப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.
பாஜகவின் அலெக்சாண்டர் லாலு ஹெக், யுடிபியின் பால் லிங்டோ மற்றும் கிர்மென் ஷைல்லா மற்றும் ஹெச்எஸ்பிடிபியின் ஷக்லியார் வார்ஜ்ரி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். மார்குயிஸ் என் மரக், ரக்கம் ஏ சங்மா, அம்பரீன் லிங்டோ, கமிங்கோன் யம்போன் மற்றும் ஏ டி மோண்டல் ஆகியோர் என்பிபியில் இருந்து கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
என்பிபி தலைமையிலான கூட்டணியில் என்பிபியின் 26 பேரும், யுடிபியின் 11 பேரும், பாஜக, எச்எஸ்பிடிபி, பிடிஎப், சுயேட்சைகள் தலா 2 பேரும் என மொத்தம் 45 எம்எல்ஏக்களின் ஆதரவு கான்ராட் சங்மாவுக்கு உள்ளது.