
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகளை ஏற்கெனவே அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கி தீவிரமாக வாக்குகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.
அடுத்தடுத்த கூட்டங்கள் நடத்தி தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக நடைபெறும் 5 மாநில தேர்தல்களில் கணிசமான வெற்றியை பெறுவதற்காக இந்தியா கூட்டணி வியூகங்களை வகுத்து வருகிறது.
அந்த வகையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிஜோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
இந்த மாநில தேர்தல்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 5 மாநில தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இதில் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. இது தவிர பீகாரில் சாதிவாரியான கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், நாடு முழுக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் தொகைக்கு ஏற்ப திட்டங்களை வகுக்க நாடு முழுக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை ராகுல் காந்தி ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு தரப்பினர் இதற்கு ஆதரவாக இல்லை என கூறப்படும் நிலையில், இது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
மேலும் பாஜகவின் வாக்கு வங்கியான இந்துக்களில் ஓபிசி வகுப்பினரின் வாக்குகளைப் பெற அமைக்க வேண்டிய வியூகங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் வாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமானவரித்துறைகளின் மூலம் சோதனை என்ற பெயரில், எதிர்க்கட்சிகள் அச்சுறுத்தப்படுவது குறித்த விவாதம் பிராதனமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.