கன்னியாகுமரியில் மெல்லக் கரையும் காங்கிரஸ்!

கன்னியாகுமரியில் மெல்லக் கரையும் காங்கிரஸ்!

தமிழகத்திலேயே காங்கிரஸ் கட்சி மிகவும் வலுவாக இருக்கும் மாவட்டம் கன்னியாகுமரி. தமிழக - கேரள எல்லையோர மாவட்டம் என்பதால் கேரளத்தைப் போலவே இங்கும் தேசிய கட்சிகள் கோலோச்சுகின்றன. அதிலும் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும் செல்வாக்கு உண்டு.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளும் இப்போது காங்கிரஸ் வசமே உள்ளது. இருந்தும் அண்மைக் காலமாக குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் தனது செல்வாக்கை மெல்ல மெல்ல இழந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையானதன் பின்னால் பெரும் உழைப்பு உள்ளது. இன்னும்கூட இங்குள்ள கிள்ளியூர், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒருமுறைகூட திராவிட கட்சிகள் வென்றது இல்லை. இவ்வளவு ஏன்... விருதுநகர் தொகுதியில் தோற்ற காமராஜர், மார்ஷல் நேசமணியின் மறைவுக்குப் பின்பு அன்றைய நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு வாகை சூடினார். காமராஜரின் வரவுக்குப் பின்பு, குமரியில் காங்கிரஸ் கட்சி இன்னும் ஆழமாக வேரூன்றியது. காமராஜருக்கு மத அடையாளம் எதுவும் இல்லாததால் இந்து, கிறிஸ்தவர் என இருதரப்பு வாக்குகளையும் தன்னகத்தே ஈர்த்துக்கொண்டது காங்கிரஸ். ‘அப்பச்சி’ என அன்பொழுக காமராஜரை அழைத்து பாசம்காட்டினர் குமரி மக்கள்!

காமராஜரின் காலத்திற்குப் பின்பு, குமரியில் சங் பரிவார் அமைப்புகள் வேகமெடுத்தன. இந்துத்துவ கோஷத்துடன் களத்திற்கு வந்த பாஜக, வழிவழியாக காங்கிரஸ் கட்சியில் இருந்த இந்துக்களின் வாக்குகளையும் அசைத்துப் பார்த்தது. காலப் போக்கில் அதில் பெருவாரியை கபளீகரமும் செய்துவிட்டது. அதேசமயம், பாஜகவின் இந்துத்துவ அரசியலை எதிர்கொள்ள சிறுபான்மையினர் காங்கிரஸை நோக்கி நகர்ந்தனர். இப்போது குமரி மாவட்டத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை மட்டுமே முழுக்க முழுக்க நம்பியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது ராகுல் காந்தி கிறிஸ்தவ பாதிரியார்களுடன் கலந்துரையாடியதும் அதன் தாக்கம் தான்.

குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்துக்களுக்கு இணையாக சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளும் உள்ளது. இதுவே காங்கிரஸ் கட்சியை இந்த மாவட்டத்தில் இதுவரை சேதாரமில்லாமல் காப்பாற்றி வருகிறது. ஆனால், இப்போது காங்கிரஸ் கட்சி சந்திக்கும் பிரச்சினை சற்றே வித்தியாசமானது.

சீமான்
சீமான்

குமரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு காங்கிரஸுக்கு நேரடியான சவாலை உண்டாக்கி இருக்கிறது. பாஜக முன்னெடுப்பது மதவாத அரசியல் என்றால், சிறுபான்மை வாக்குகளோடு, பாஜகவின் மத அரசியலுக்கு எதிரான வாக்குகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது காங்கிரஸ். இதுவரை பாஜகவுக்கு எதிரான வாக்குகளை மொத்தமாக வாங்கிவந்த காங்கிரஸ் கட்சிக்கு இப்போது நாம் தமிழர் கட்சியுடனும் மோதவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில் குமரி தொகுதியில் வெறுமனே 15 ஆயிரம் வாக்குகளே பெற்ற நாம் தமிழர் கட்சியானது வசந்தகுமார் மறைவுக்குப் பின்பு நடந்த இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. அந்தளவுக்கு சீமான் முன்னெடுக்கும் தமிழ் தேசியம் இளம் தலைமுறை வாக்காளர்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கடலோர கிராமங்களில் சீமானுக்கு செல்வாக்கு உயர்ந்துகொண்டே வருகிறது. அந்த இடத்தில் தான் காங்கிரஸின் சறுக்கலும் தொடங்குகிறது.

குமரி மாவட்டத்தில் சீமான் வசீகரிக்கும் வாக்குகள் பெரும்பாலும் சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளாகவே இருக்கிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழகத்திலேயே ஒரே ஒரு ஒன்றிய கவுன்சிலர் சீட் வென்றது. அது குமரி மாவட்டத்திலுள்ள ராஜாக்கமங்கலம் துறை என்னும் கடற்கரை கிராமம் என்பது கவனிக்கத்தக்கது!

குமரி மாவட்டத்தில் காங்கிரஸை வளர்த்தெடுத்ததில் மீனவ சமூகத்தின் பங்களிப்பு மிக அதிகம். ஆரோக்கியபுரம் முதல் நீரோடிவரை நீண்டிருக்கும் மீனவ கிராமங்களில் ஒன்றே முக்கால் லட்சம் மீனவர் வாக்குகள் உள்ளன. இவர்களில் பெரும்பகுதியினர் கிறிஸ்தவர்கள். இதனால் கடலோர கிராமங்களில் பாஜகவுக்கு தேர்தல் வேலை செய்யக்கூட முந்தைய தேர்தல்களில் ஆட்கள் சிக்கவில்லை.

காமராஜர் அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் லூர்தம்மாள் சைமன். இவர்தான் தமிழகத்தின் இரண்டாவது பெண் அமைச்சர். குமரியைச் சேர்ந்த மீனவப் பெண்ணுக்கு காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்கொடுத்த நன்றிப் பெருக்கும் மீனவர்களுக்கு இருந்தது. ஆனால், கடந்த இருபது ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியானது மீனவர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைக்கூட கொடுக்கவில்லை. இருப்பினும் தேர்தல் நெருக்கத்தில் பாஜகவை சொல்லி பயம்காட்டியே மீனவர்களின் வாக்குகளை வாங்கி வந்தது. இதனால் காலங்காலமாக தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக நினைக்கும் கிறிஸ்தவ மீனவர்கள் இப்போது விழித்துக் கொண்டுவிட்டார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் பாஜகவை நோக்கி துணிச்சலாக நகர ஆரம்பித்திருப்பது காங்கிரஸுக்கு நல்ல சமிக்ஞையாக தெரியவில்லை. ஏற்கெனவே நாம் தமிழர் கட்சியால் குமரியில் சரிவைச் சந்தித்து வரும் காங்கிரஸுக்கு சிறுபான்மையினரை ஈர்க்கும் பாஜகவின் தற்போதைய வியூகமும் பலமான அடியைக் கொடுக்கும்.

இரையுமன் சாகர்
இரையுமன் சாகர்

இதுகுறித்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான இரையுமன் சாகரிடம் பேசினோம். “கடற்கரை கிராமங்களில் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருவது உண்மைதான். ஆனால், அது வெற்றிக்கான வளர்ச்சி அல்ல. இளம் தலைமுறையினர் மத்தியில் சீமானின் பேச்சு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடலோடு போராடும் மீனவர்களுக்குள் இயல்பாகவே போராட்ட குணம் இருக்கும். சற்றேறக்குறைய அதே மனநிலையிலேயே சீமானின் முழக்கத்தைப் பார்ப்பதும் ஒரு காரணம். ஆனால், அதுவே காங்கிரஸை முழுக்க அகலபாதாளத்தில் தள்ளிவிடும் என்று நான் நம்பவில்லை.

மற்றபடி பாஜகவில் மீனவர்கள் இணைந்திருப்பது கொஞ்சம் கவனத்தில் கொள்ளத்தக்கது. இனயம், சின்னத்துறை என வரிசையாக மீனவ கிராமங்களில் பாஜக இணைப்பு விழாக்களை நடத்துகிறது. மாற்றுக் கட்சிகளில் இருந்து அதிருப்தியில் வெளியேறிய மீனவ சமூகத்தினரே பாஜகவில் மீனவர்களை சேர்த்து வருகின்றனர். இது முழுக்க சொந்த கட்சியின் மீதான அதிருப்தி. தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சி. கடற்கரையில் தங்களுக்கு அடித்தளம் இல்லாததால் இப்படி புதிதாக வருபவர்களுக்கு பாஜகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது.

இதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு, காலம் காலமாக தங்களுக்கு வாக்களிக்கும் மீனவர்களின் கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சி திரும்பிப்பார்க்க வேண்டும். லூர்தம்மாள் சைமன், கொட்டில்பாடு துரைசாமிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியானது குமரியில் மீனவத் தலைவர்கள் யாரையும் உருவாக்கவில்லை. இந்த அழுத்தமெல்லாம் மீனவ மக்களுக்கு இருப்பதை உணர்கிறேன். ஆனாலும் பாஜகவுக்கு எதிரான கோபத்தில் அவை அடங்கிவிடும்.

காங்கிரஸ் மீனவர்களுக்கு உரிய நியாயம் செய்யாமல் நீண்டகாலத்துக்கு நெய்தல் நிலத்தில் அரசியல் செய்துவிட முடியாது. பாஜகவை ஆதரிப்பதில் தான் பிரச்சினையே தவிர, மீனவர்களுக்கு மாற்றுவழிகள் இருப்பதை காங்கிரஸ் உணர வேண்டும். தங்களுக்கே வாக்களிக்கும் மீனவர்களுக்கு நாம் என்ன திரும்பச் செய்திருக்கிறோம் என்பதை காங்கிரஸ் மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும்” என்றார் அவர்.

வாக்களித்த மக்களுக்காக தாங்கள் எதையுமே செய்யாவிட்டாலும் பாஜக எதிர்ப்பு மனப்பான்மையால் குமரி மாவட்டத்து சிறுபான்மை மக்களுக்கு தங்களைவிட்டால் வேறு மார்க்கமில்லை என்ற மிதப்பு காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் உண்டு. அதனால் தான் இந்த மாவட்டத்துக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில்கூட மக்களைவிட்டு அந்நியமாகிவிட்ட மனிதர்களைத் தேடினார்கள். இனிமேல் அப்படியெல்லாம் மிதப்பில் இருக்க முடியாது என்பதே இப்போதைய களநிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in