ராஜஸ்தான் உட்கட்சி பிரச்சினையைத் தீர்க்க வழியை உருவாக்குவோம்: ஜெய்ராம் ரமேஷ் உறுதி

ராஜஸ்தான் உட்கட்சி பிரச்சினையைத் தீர்க்க வழியை உருவாக்குவோம்: ஜெய்ராம் ரமேஷ் உறுதி

ராஜஸ்தானில் நிலவும் உட்கட்சி பூசலை தீர்க்க கட்சித் தலைமை ஒரு வழியை உருவாக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அவரது சச்சின் பைலட் இடையே ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி நடந்து வருகிறது. ஆனால் ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை மாநிலம் வழியாகச் செல்லும்போது, இவர்கள் இருவருமே ஐக்கிய முன்னணி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொடர்பு, விளம்பரம் மற்றும் ஊடகங்களுக்கான பொறுப்பாளர், "தனி நபர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ராஜஸ்தானில் உட்கட்சி பிரச்சினையை தீர்த்து கட்சியை முன்னோக்கி கொண்டு செல்லும் வழியை தலைமை கொண்டு வரும். இது அமைப்பின் முதன்மையைப் பாதுகாக்கும், எந்த ஒரு தனிநபரின் முக்கியத்துவத்தை அல்ல," என்று கூறினார்.

தொடர்ந்து ராஜஸ்தான் காங்கிரஸில் நிலவும் கோஷ்டி பூசல் பற்றி கேட்டதற்கு, “காங்கிரஸ் 137 ஆண்டுகளாக கோஷ்டிகளின் கட்சியாக இருந்து வருகிறது. 1980 களில் ராஜஸ்தானில் ஹரிதேவ் ஜோஷி, ஷிவ்சரண் மாத்தூர் மற்றும் நவல் கிஷோர் சர்மா ஆகியோர் தனித்தனி கோஷ்டிகளைக் கொண்டிருந்தனர். ஆனால் உறுப்பினர்கள் கட்சியின் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டுள்ளனர். காங்கிரஸ் பாஜக மற்றும் சிபிஎம் போல கேடர் அடிப்படையிலான கட்சி அல்ல" என தெரிவித்தார்

மேலும், எந்தவொரு தனிநபரின் முதன்மையும் முக்கியமல்ல என்றும், அமைப்பை வலுப்படுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதே ஒரே நோக்கம் என்றும் அவர் கூறினார். யாத்திரை முடிந்ததும் ராஜஸ்தானில் தேர்தல் பணிகள் தொடங்கும் என்றும், சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு அல்லது எட்டு மாதங்கள் மட்டுமே உள்ளன என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in