ராகுல் காந்தியின் மரபணுவை பரிசோதிக்க வேண்டும்: சர்ச்சையைக் கிளப்பிய எம்.எல்.ஏ.,

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்பி- ராகுல் காந்தியின் மரபணு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கேரள இடதுசாரி எம்எல்ஏ- பி.வி.அன்வர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “பல வழக்குகளில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவரை மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகள் ஏன் கைது செய்து விசாரிக்கவில்லை?” என கேள்வி எழுப்பியிருந்தார். ராகுல் காந்தியின் இத்தகைய பேச்சுக்கு அம்மாநில இடதுசாரி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

எம்எல்ஏ- பி.வி. அன்வர்
எம்எல்ஏ- பி.வி. அன்வர்

இந்நிலையில், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணியைச் சேர்ந்தவரும், நீலம்பூர் தொகுதி எம்எல்ஏ-வுமான பி.வி.அன்வர், “நான் ராகுல் காந்தியின் தொகுதியான வயநாட்டின் ஒரு பகுதியில் இருக்கிறேன். நான் அவரை காந்தி என்ற குடும்பப் பெயரால் அழைக்க மாட்டேன்.

அதற்கு தகுதியற்ற ஒரு தாழ்ந்த குடிமகனாக அவர் மாறிவிட்டார். இதை நான் சொல்லவில்லை. கடந்த இரண்டு நாட்களாக இந்திய மக்கள் சொல்லி வருகின்றனர். நேரு குடும்பத்தில் இது போன்ற உறுப்பினர்கள் இருப்பார்களா? இதில் எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. ராகுல் காந்தியின் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட வேண்டும். ஜவஹர்லால் நேருவின் பேரனாக வளர ராகுலுக்கு எந்த உரிமையும் இல்லை. ராகுல் காந்தி பிரதமர் மோடியின் ஏஜென்டா என நாம் சிந்திக்க வேண்டிய நிலைக்கு விஷயங்கள் வந்துள்ளன” என்று பேசி அதிர வைத்தார்.

இடதுசாரிகள், காங்கிரஸ்
இடதுசாரிகள், காங்கிரஸ்

ராகுல் காந்தியின் டிஎன்ஏ-வை பரிசோதிக்க வேண்டும் என கேரள எம்எல்ஏ அன்வர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக அம்மாநில காங்கிரஸ் செயல் தலைவர் எம்.எம்.ஹசன் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in