
2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் பணிக்குழு, புதிய கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் திங்கள்கிழமையன்று முதல் முறையாக கூடுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் பணிக்குழுவுடன் நடைபெறவுள்ள முதல் கூட்டம் இதுவாகும். தேர்தல் வியூகக் குழுவின் உறுப்பினர்கள், பணிக்குழுவின் பணிகள் மற்றும் 2024 தேர்தலுக்கான திட்டம் குறித்து புதிய தலைவருக்கு விளக்கமளிப்பார்கள்.
தேர்தல் பணிக்குழுவில் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான், ரந்தீப் சுர்ஜேவாலா, பிரியங்கா காந்தி மற்றும் சுனில் கனுகோலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில், 2024 தேசியத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் சவால்களை எதிர்கொள்ள "அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவை" அமைப்பதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி 2024 -ம் ஆண்டு தேர்தலுக்கான 8 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்தார்.