முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக காங்கிரஸார் திடீர் உண்ணாவிரதம்!- காரணம் இதுதான்?

காங்கிரஸ் உண்ணாவிரதம்
காங்கிரஸ் உண்ணாவிரதம்

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று காலை முதல் பேனர்கள் வைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

ராஜீவ்காந்தி நினைவிடம்
ராஜீவ்காந்தி நினைவிடம்

ராஜீவ்காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் சேவாதள மாநிலத் தலைவர் கோவை ஆர்.சரவணன் உட்பட, அந்த அமைப்பைச் சேர்ந்த 6 பேர் இன்று காலை ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்திற்கு வந்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்களுக்கு எதிராகப் பேனர்களை வைத்து, அங்கேயே உண்ணாவிரதத்தில் அமர்ந்தனர். நுழைவு வாயில் அருகிலேயே உண்ணாவிரதம் இருந்ததால் அஞ்சலி செலுத்த வருபவர்கள் இவர்களைச் சந்திக்காமல் செல்ல முடிவதில்லை.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, முன்னாள் தலைவர் தங்க பாலு உள்ளிட்ட காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். மேலும் பிற மாநில முன்னாள் முதல்வர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். தொடக்கத்தில் வந்த கே.எஸ். அழகிரி ராஜீவ் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்களிடம் பேசிவிட்டுச் சென்றார். அடுத்தடுத்து வந்தவர்களும் அவர்களைச் சந்தித்துக் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துவிட்டுச் செல்கிறார்கள்.

காங்கிரஸார் உண்ணாவிரதம்
காங்கிரஸார் உண்ணாவிரதம்

இவர்கள் உண்ணாவிரதம் இருப்பதை அறிந்து அங்கு வந்த காவலர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். நாங்கள் எங்கள் இடத்தில் உண்ணாவிரதம் இருக்கிறோம். யாருக்கும் தொந்தரவு ஏற்படாது என உண்ணாவிரதம் இருந்த காங்கிரஸார் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குச் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு காவல்துறையினர் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவு இருப்பதால் காலையில் தொடங்கிய உண்ணாவிரதம் தற்போது வரை தொடர்கிறது. பேரறிவாளன் விடுதலையில் திமுக மீது காங்கிரஸ் கடும் அதிருப்தியிலிருந்து வருகிறது. இந்த நிலையில் கூட்டணிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் தமிழக முதல்வருக்கு எதிராகக் காங்கிரஸ் போராட்டத்தில் குதித்துள்ளது.

கூட்டணி வேறு, கொள்கை வேறு என கே.எஸ். அழகிரி சொன்னது இதுதான் போல!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in