தோல்விகளால் திணறும் காங்கிரஸ்; மீட்சிக்கான வழி என்ன?

தோல்விகளால் திணறும் காங்கிரஸ்; மீட்சிக்கான வழி என்ன?

‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ என்ற பாஜகவின் முழக்கம் கிட்டத்தட்ட வட இந்தியாவில் நிறைவேறியே விட்டது. இமாச்சல பிரதேசத்தை தவிர வட இந்தியா, மத்திய இந்தியா, வடகிழக்கு மாநிலங்கள் என எங்குமே காங்கிரஸின் ஆட்சி இல்லை. நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் என்பது காங்கிரஸாரின் மன உறுதியை குலைத்துப் போட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் வருவதற்கு முந்தைய நாள் வரை காங்கிரஸ் ஒரு கனவுலகத்தில்தான் இருந்தது. எனவேதான் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியைக்கூட அது கண்டுகொள்ளவில்லை. ராஜஸ்தான் கைவிட்டுப் போனாலும் ம.பி, சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களை கைப்பற்றிவிடலாம், மிசோரமிலும் முக்கிய கட்சியாகலாம் என்றெல்லாம் கணக்குப்போட்டது காங்கிரஸ். ஆனால் தேர்தல் முடிவுகள் காங்கிரஸின் எல்லா கனவுகளையும் கலைத்தெறிந்துவிட்டது. ரேவந்த் ரெட்டியின் புண்ணியத்தால் தெலங்கானா மட்டும் கைகொடுத்திருக்கிறது, அதுவும் போயிருந்தால் சொல்வதற்கு ஒன்றுமில்லாமல் போயிருக்கும்.

ராகுல், பிரியங்காவுடன் ரேவந்த் ரெட்டி
ராகுல், பிரியங்காவுடன் ரேவந்த் ரெட்டி

காங்கிரஸ் கட்சியில் மூன்று அடுக்குகள் உள்ளன. முதலாவது தலைமை, அடுத்தது இரண்டாம் கட்ட தலைவர்கள், மூன்றாவது கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள். மக்களின் எண்ணவோட்டம் என்ன என்பது அடிமட்டத் தொண்டர்களுக்குத்தான் தெரியும். அவர்கள் அதனை இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு கடத்த வேண்டும். அவர்கள் அதற்கு ஒரு வடிவம் கொடுத்து தலைமைக்கு கொண்டு செல்லவேண்டும். தலைமையானது மக்களின் எண்ணவோட்டத்துக்கு ஏற்ப செயல்திட்டங்களை, வியூகங்களை வகுக்கும். காங்கிரஸில் இந்த மூன்று அடுக்குகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு இரும்பு வேலியோடு உள்ளது.

காங்கிரஸ் தோல்வியுற்ற ராஜஸ்தான், சத்தீஸ்கர், ம.பி போன்ற மாநிலங்களில் வாக்கு சதவீதம் பெருமளவுக்கு குறைந்துவிடவில்லை. ராஜஸ்தானில் பாஜக 41.69%, காங்கிரசுக்கு 39.53%. அதுவே சத்தீஸ்கரில் பாஜகவுக்கு 46.27%, காங்கிரசுக்கு 42.23%, ம.பியில் பாஜகவுக்கு 48.62%, காங்கிரசுக்கு 40.45% வாக்குகள் கிடைத்தன. இதில் கருத்துக்கணிப்புகளின்படி கடைசி நாள் வரை சத்தீஸ்கர், ம.பி மாநிலங்கள் காங்கிரசுக்கு சாதகமாகவே இருந்தன. ஆனால், கடைசிநேரத்தில் முடிவை மாற்றியது பாஜகவின் கடுமையான களப்பணிதான்.

வெற்றிக்களிப்பில் ரேவந்த் ரெட்டி
வெற்றிக்களிப்பில் ரேவந்த் ரெட்டி

காங்கிரஸ் கட்சி அட்டகாசமான இலவச வாக்குறுதிகள் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு என பேசி கர்நாடகாவில் வெற்றிபெற்றது. உடனே இதுதான் தேர்தலுக்கான வெற்றிமாடல் என பிடித்துக்கொண்டு அதே வாக்குறுதிகள், அதே அறிவிப்புகள் என இந்த 5 மாநில தேர்தலிலும் செயல்படுத்தியது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே என எல்லோரும் சொல்லிவைத்த மாதிரி ஒரே விஷயத்தையே பேசினார்கள். இது கர்நாடகாவுக்கு அருகாமையிலுள்ள தெலங்கானாவில் எடுப்பட்டது. ஆனால், வடமாநிலங்களில் சுத்தமாக எடுபடவில்லை என்பதை தேர்தல் முடிவுகளே காட்டிவிட்டன.

கர்நாடகாவில் சித்தராமையா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இருந்தனர். இருந்தாலும் டி.கே.சிவகுமாரின் வியூகங்களும், முகமுமே அங்கே காங்கிரசின் வெற்றிக்கு உதவியது. அதே போல தெலங்கானாவில் பல மூத்த தலைவர்கள் இருப்பினும் ரேவந்த் ரெட்டியின் சுறுசுறுப்பும், முகவசீகரமுமே அம்மாநிலத்தில் கைகொடுத்திருக்கிறது. ஆனால், ம.பி-யில் கமல்நாத் மூத்த தலைவர் என்றாலும், மக்களை அவரால் வசீகரிக்க முடியவில்லை. ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் மூத்த தலைவர்கள் என்றாலும், அவர்களின் முகமும் மக்களிடம் எடுபடவில்லை. போதாதுக்கு இருவருக்குள் இடையில் அதிகாரப் போட்டி வேறு.

இதையெல்லாம் உணர்ந்துதான் பாஜக ராஜஸ்தானில் வசுந்தரா ராஜேவையும், ம.பி-யில் சிவராஜ் சிங் சவுகானையும் முன்னிலைப்படுத்தாமல் விட்டனர். அங்கெல்லாம் மோடியின் முகமே பிரதானமாகி வாக்குகளை கவர்ந்தது.

சத்தீஸ்கரில் இது எல்லாவற்றையும் தாண்டி பாஜகவின் வியூகம் இருந்தது. ஏனென்றால், அம்மாநிலத்தில் பூபேஷ் பகேல் மக்களால் விரும்பப்படும் தலைவராக இருந்தார். ஆட்சிக்கு எதிராக பெரிய அளவுக்கு அதிருப்தி ஏதும் இல்லை. எனவே, இறுதி கட்டம் வரை பாஜகவால் எதுவும் செய்ய இயலவில்லை. இதனால்தான் கடைசி ஆயுதமாக மகாதேவ் செயலி ஊழல் விவகாரத்தை வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பு பூதாகரமாக்கினார்கள். பிரதமர் முதல் பாஜக பூத் கமிட்டிவரை இந்த ஊழல் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த விவகாரம்தான் கருத்துக்கணிப்புகளையெல்லாம் ஊதித்தள்ளி சத்தீஸ்கரில் பாஜக வெற்றிவாகை சூட காரணமானது.

பாஜகவில் அடிமட்ட தொண்டர்களின் மனவோட்டம், படிப்படியாக தலைமை வரை முறையாக உடனுக்குடன் கடத்தப்படுகிறது. இதன் காரணமாகவே பாஜக வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள்வரை வியூகங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறது. ம.பி-யில் தேர்தலுக்கு முன்பே பெண்களுக்கான உதவித் தொகையை வழங்கிய பாஜக, சத்தீஸ்கரில் தேர்தல் பரப்புரையின் கடைசிநாளில்தான் பெண்களுக்கான உதவித்தொகை வாக்குறுதியை அளித்தது. பிரதமர் மோடி சாதிவாரி கணக்கெடுப்பை தீவிரமாக எதிர்த்துகொண்டிருந்த நேரத்தில், அமித் ஷா, “அதற்கு நாங்கள் எதிரியில்லை” என்றார். அதுபோல எங்கே எந்த வாக்குறுதி, எந்த முகம், எந்த வியூகம் தேவையோ அதை பாஜக கச்சிதமாக செய்துமுடித்து வெற்றிபெற்றுள்ளது.

ஆனால் காங்கிரஸ், கர்நாடகாவில் பேசியதையே, ம.பி-யிலும், மிசோரமிலும் பேசியது. அதனை மக்கள் ரசிக்கவே இல்லை. அதுபோல ஓரிரு தொகுதிகளை கொடுத்திருந்தாலே அகிலேஷ், நிதிஷ், இடதுசாரி கட்சிகள் இணக்கமாக இருந்திருப்பார்கள். அதுவும் மக்கள் மனதில் ஒரு நேர்முறை எண்ணத்தை விதைத்து வாக்குகளாக மாறியிருக்கும். அந்த வாய்ப்பையும் தவறவிட்டார்கள்.

தேசம் முழுமைக்கும் காங்கிரசின் கை ஓங்கியிருந்த காலம் மாறி, மூன்று மாநிலங்களுக்குள் மட்டுமே ஆட்சி சுருங்கிவிட்டது. இனியேனும் காங்கிரஸ் வெற்றிபெறவேண்டுமானால் நிச்சயமாக அதன் வியூகங்களை மாற்றவேண்டும். கட்சியின் அடிமட்ட தொண்டர்களை தலைவராக்க வேண்டும். தலைமை பொறுப்புகளை அடைத்துக்கொண்டு பல்லாண்டு காலமாக அனுபவிப்பவர்களுக்கு விடைகொடுத்துவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மக்களின் எண்ணவோட்டத்தை உணர்ந்து மாநிலத்துக்கேற்ப, பிராந்தியத்துக்கேற்ப, தொகுதிக்கேற்ப உத்திகளை வகுக்கவேண்டும்.

சமீப காலங்களில் டி.கே.சிவகுமார், ரேவந்த் ரெட்டி ஆகியோர் நம்பிக்கை முகங்களாகியுள்ளனர். இதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் புதியவர்களை தலைவர்களாக்க வேண்டும். அப்போதுதான் மாநிலத் தேர்தல்களில் வெற்றிபெறலாம். மக்களவைத் தேர்தலில் வெல்ல வேண்டுமானால் மோடிக்கு இணையான ஒருவரை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும். அது ராகுல் காந்திதானா என்பதை, காங்கிரஸாரே ஒருமுறை தங்களின் நெஞ்சில் கைவைத்து முடிவு செய்துகொள்ளட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in