‘பாஜகவின் ரூ4 லட்சம் கோடி PayPM ஊழல்... தேர்தல் பத்திரம் மீண்டும் வந்தால் எவ்வளவு கொள்ளையடிப்பார்களோ?’

பேபிஎம் குற்றச்சாட்டு
பேபிஎம் குற்றச்சாட்டு

பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும், தேர்தல் பத்திரம் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்ற நிதியமைச்சர் சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜகவின் தேர்தல் பத்திரம் திட்டத்தை சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக தாக்குதல் தொடுத்து வருகின்றன. கருப்பு பணத்தை ஒழிப்பது, ரொக்க பரிவர்த்தனையை தடுப்பது, ஒளிவு மறைவற்ற நன்கொடையை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களுடன் கொண்டு வரப்பட்டதாக பாஜக கூறும் தேர்தல் பத்திரங்கள் ஏற்பாட்டை பலவகையிலும் காங்கிரஸ் கட்சி பழித்து வருகிறது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளைக் கொண்டு நிறுவனங்களை மிரட்டி, அவற்றிடமிருந்து தேர்தல் பத்திரங்களை பாஜக பெற்றுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதனை பலவகையிலும் நிரூபிக்க முயலும் காங்கிரஸ், மக்களவை தேர்தல் களத்தில் தேர்தல் பத்திரம் திட்டத்தை முன்வைத்து பாஜகவை தொடர்ந்து சீண்டியும் வருகிறது.

இதனிடையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ’பாஜக மீண்டும் பொறுப்பேற்றதும் தேர்தல் பத்திரம் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம். இதற்காக வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று வருகிறோம்’ என்று தெரிவித்தது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், “PayPM ஊழலில் 4 லட்சம் கோடி ரூபாய் பொதுப் பணத்தை பாஜக கொள்ளையடித்தது நமக்குத் தெரியும். தேர்தல் பத்திரத்தை மீண்டும் கொண்டுவருவதன் மூலம் அவர்கள் தங்கள் கொள்ளையைத் தொடர விரும்புகிறார்கள்.

PayPM ஊழலில் பிரதமர் மோடி நான்கு உபாயங்களைப் பயன்படுத்தினார். 1.ப்ரீபெய்ட் லஞ்சத்தில் முன்கூட்டியே வசூல் நடந்திருக்கிறது. 2.போஸ்ட்பெய்ட் முறையில் பின்னர் வசூலித்திருக்கிறார்கள். 3.ரெய்டுக்கு பிந்தைய லஞ்சம் முறையில் ரெய்டுகள் மூலம் மிரட்டிப் பணம் பறித்துள்ளனர். 4.ஷெல் நிறுவனங்கள் வாயிலான பரிவர்த்தனை. இந்த வகையில் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர்.

பாஜகவினர் வெற்றி பெற்று தேர்தல் பத்திர திட்டத்தை மீட்டெடுத்தால், இந்த முறை எவ்வளவு கொள்ளையடிப்பார்களோ? இது எங்கள் வாழ்நாளில் மிக முக்கியமான தேர்தல். அதிர்ஷ்டவசமாக, இந்த ஊழல் படையான பாஜக ஆட்சியை விட்டு வெளியேறும் பாதையில் உள்ளது என்பதை தேர்தல் கள நிலவரங்கள் தெளிவுபடுத்துகின்றன” என தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in