காங்கிரஸ் - ஆர்ஜேடி மீண்டும் மோதல்!

பிஹார் அரசியலில் சலசலப்பு
காங்கிரஸ் - ஆர்ஜேடி மீண்டும் மோதல்!

பிஹார் மாநிலத்தில் காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிகளிடையே மீண்டும் மோதல் தொடங்கியிருக்கிறது. அம்மாநில மேலவைக்கு இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில் இரு கட்சிகளும் ஒன்றையொன்று விமர்சித்துக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டது. தாராப்பூர், குசேஷ்வர் அஸ்தான் தொகுதிகளில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுடன் கலந்தாலோசிக்காமல் ஆர்ஜேடி தனது வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸை அதிர்ச்சியடையச் செய்தது. ஆர்ஜேடிக்கும் பாஜகவுக்கும் இடையில் ரகசிய உறவு இருப்பதாக, மாநிலக் காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

அதுதொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த லாலு பக்த சரண் தாஸை 'பக்சோன்ஹர்' (உள்ளூர் மொழியில் 'முட்டாள்') என்று விமர்சித்தது பெரும் சர்ச்சையானது. பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த பக்த சரண் தாஸை, லாலு தவறான வார்த்தைகளால் விமர்சித்ததாகக் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து, 2025-ல் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2024 மக்களவைத் தேர்தலிலும் ஆர்ஜேடியுடன் கூட்டணி கிடையாது எனக் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இதற்கிடையே, இடைத் தேர்தலில் பிஹார் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இந்தத் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் - ஆர்ஜேடி இடையிலான சச்சரவு தணிந்துவிட்டதாகவே கருதப்பட்டது. இதையடுத்து மகா கூட்டணி தொடரும் என்றும் ஊகங்கள் எழுந்தன.

எனினும், 2020 சட்டப்பேரவைத் தேர்தலில், கூட்டணியில் இருந்த காங்கிரஸ் செய்த குளறுபடியால் அரியணை ஏறும் வாய்ப்பு கைநழுவியதால் உருவான அதிருப்தி மனநிலையிலிருந்து ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்னும் வெளிவரவில்லை. அவ்வப்போது அதைச் சுட்டிக்காட்டி அவர் பேசவும் தவறுவதில்லை. கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பிடிவாதம் பிடித்து 70 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, மொத்தம் 19 இடங்களில் மட்டும்தான் வெற்றிபெற்றது.

இந்நிலையில், மேலவைத் தேர்தலில் தங்கள் சொந்த பலத்தில் போட்டியிடப்போவதாக தேஜஸ்வி யாதவ் கூறியிருக்கிறார். கூட்டணியில் இடதுசாரி கட்சிகளுக்கு இடம் உண்டு என்றே தெரிகிறது. எனினும், காங்கிரஸ் விஷயத்தில் ஆர்ஜேடி பாராமுகம் காட்டுகிறது. “தேசிய அளவில் காங்கிரஸுக்கு ஆதரவு வழங்குவோம் எனத் தெளிவாகச் சொல்லிவிட்டோம். இதற்கு மேல் வேறு என்ன செய்ய முடியும்?” என தேஜஸ்வி யாதவ் கூறியிருக்கிறார்.

லாலு பிரசாத் யாதவ் - சோனியா காந்தி இடையே தனிப்பட்ட ரீதியில் மதிப்பு கலந்த நட்புறவு நிலவினாலும், இரு கட்சிகளின் இன்றைய தலைமுறை தலைவர்கள் இடையே அத்தனை இணக்கம் காணப்படவில்லை.

“தேஜஸ்வி யாதவ் பெரிய தலைவர். பிஹாரில் யாருக்கு உதவ அவர் முயல்கிறார் என அவர் சொல்ல வேண்டும்” என்று பிஹார் காங்கிரஸ் எம்எல்சியும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான பிரேம் சந்திர மிஸ்ரா கூறியிருக்கிறார்.

“ஆர்ஜேடி கட்சியுடனான கூட்டணியின் காரணமாக காங்கிரஸ் கட்சி அதிக பாதிப்புகளைச் சந்தித்திருக்கிறது. எனினும், தனது சொந்த அரசியல் நலனைவிடவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சித்தாந்த ரீதியாக எதிர்ப்பதையே முக்கியமாகக் கருதுகிறது” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in