காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் கார்கேவா? சசி தரூரா? - வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் கார்கேவா? சசி தரூரா? - வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு அக்டோபர் 17ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள 65 வாக்குப்பதிவு மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டிருந்த இந்த வாக்குப்பதிவு மையங்களில் மொத்தமுள்ள 9,900 வாக்குகளில் 9,500 பிரதிநிதிகள் வாக்களித்துள்ளனர். இது 96% வாக்குப்பதிவு ஆகும்.

137 ஆண்டுகள் பாரம்பரியமுள்ள காங்கிரஸ் கட்சிக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களில் கார்கே சோனியா காந்தி குடும்பத்தின் நம்பிக்கையை பெற்றவராக கருதப்படுகிறார். எனவே இவர் வெற்றிபெறுவது கிட்டத்திட்ட உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் தலைவர் ரேஸில் இருந்த ஜி 23 குழுவைச் சேர்ந்த சசிதரூரும் கார்கேவுக்கு கடும் போட்டியைக் கொடுத்து வருகிறார்.

இந்தியா முழுவதும் கடந்த திங்கட்கிழமை பதிவான வாக்குகள் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு எல்லா வாக்குச்சீட்டுகளும் ஒன்றாக கலக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டவுடன் உடனடியாக முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது.

1998ம் ஆண்டில் சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார். 2017ல் ராகுல் காந்தி தலைவராகும் வரை சோனியா காந்தியே தலைவராக இருந்தார். காங்கிரஸில் நீண்ட காலம் தலைவராக பதவி வகித்தவர் சோனியாதான். 2019ல் ராகுல் பதவியிலிருந்து விலகியபின்னர், தற்போது வரை சோனியா காந்தி காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக உள்ளார். தற்போது கால் நூற்றாண்டுக்குப் பிறகு காந்தி குடும்பத்தை அல்லாத ஒரு புதிய தலைவர் காங்கிரஸ் கட்சியில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in