முக்கிய பதவியை ராஜினாமா செய்தார் மல்லிகார்ஜுன கார்கே: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்காக நடவடிக்கை

முக்கிய பதவியை ராஜினாமா செய்தார் மல்லிகார்ஜுன கார்கே: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்காக நடவடிக்கை

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, தனது ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

"ஒரு நபர், ஒரு பதவி" என்ற காங்கிரஸின் கட்டுப்பாட்டுக்கு இணங்க மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பியுள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவரான சோனியா காந்தி, இப்போது காங்கிரஸ் சார்பில் புதிய எதிர்க்கட்சித் தலைவரை நியமித்து மாநிலங்களவைத் தலைவரிடம் தெரிவிப்பார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பத்தை அல்லாத ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். 80 வயதான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி குடும்பத்தின் ஆதரவைப் பெற்ற வேட்பாளராக உள்ளார். இதனால் அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

தற்போதைய காங்கிரஸ் தலைவருக்கான நேரடிப் போட்டியில் 'ஜி-23' அதிருப்தி குழுவின் முக்கியத் தலைவரான சசி தரூரும் களத்தில் உள்ளார். மூன்றாவது வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் கேஎன் திரிபாதியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வியாழக்கிழமையன்று தனக்கான வேட்புமனுக்களை சேகரித்த திக்விஜய் சிங், நேற்று காலையில் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த பிறகு போட்டியில் இருந்து விலகினார்.

மல்லிகார்ஜுன் கார்கே மீது தனக்கு எந்த கெட்ட அபிப்ராயமும் இல்லையென விளக்கமளித்த சசி தரூர், அவரை "காங்கிரஸின் பீஷ்ம பிதாமகர்" என்று அழைத்தார். மேலும், "நாங்கள் போட்டியாளர்கள் அல்ல, சகாக்கள்" என்றும் அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in