கருணாநிதிக்கு பதில் காமராஜர் பெயர் வைக்கவும்: திமுகவை எதிர்க்கும் குமரி காங்கிரஸ்

கருணாநிதிக்கு பதில் காமராஜர் பெயர் வைக்கவும்: திமுகவை எதிர்க்கும் குமரி காங்கிரஸ்

நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு கலைஞர் மாளிகை (அரங்கம்) என பெயர் சூட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியே இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சயரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் சுவாரஸ்யப் பின்னணியை விளக்குகிறது இந்தப் பதிவு.

முந்தைய அதிமுக ஆட்சியில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது நாகர்கோவில் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. புதிதாக உதயமான நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டத் தீர்மானிக்கப்பட்டது. அப்போதுதான், நகராட்சிக்கு சொந்தமான கலைவாணர் அரங்கத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கட்டியும் முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடத்திற்கு கலைஞர் மாளிகை எனப் பெயர் சூட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கலைவாணர் அரங்கத்தை இடித்துவிட்டு, புதுகட்டிடம் கட்டிவிட்டு கலைஞர் மாளிகை எனப் பெயர் சூட்டுவதா என கலைவாணரின் ரசிகர்கள் ஒருபக்கம் முறுக்கிக்கொண்டு நிற்க, முன்னாள் முதல்வரும், தமிழகத்தில் கல்வி வெளிச்சத்தை பாய்ச்சியவருமான காமராஜர் பெயரை இந்த புதிய கட்டிடத்திற்கு சூட்டவேண்டும் என காங்கிரஸ் போராடத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவரும், தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்றத் தலைவருமான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இதுதொடர்பாக பேசிமுடிவெடுக்க அவசரக் கூட்டத்தை இன்று கூட்டுகின்றனர்.

காமராஜர் குமரி மாவட்டத்தில் அன்றைய நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். குமரி மாவட்டத்தில் இருக்கும் ஆசியாவிலேயே மிக உயரமான மாத்தூர் தொட்டில்பாலம் இன்றும் காமராஜரின் புகழை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் இருக்கும் நூற்பாலை தொடங்கி, காமராஜர் ஆட்சியில் குமரிக்கு வந்தத் திட்டங்கள் ஏராளம். அதனால் காமராஜர் பெயர் சூட்டவேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறது காங்கிரஸ் கட்சி!

காங்கிரஸ் கோரிக்கை என்னவோ காமராஜர் பெயர் சூட்டுவதுதான். ஆனால் இப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது கலைஞர் மாளிகை என்னும் பெயருக்கு! அந்தவகையில் காங்கிரஸ், கலைஞரை எதிர்ப்பதாகவும் இதைப் புரிந்துக்கொள்ளலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in