மத்திய பிரதேச பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி - காங்கிரஸ் ஏமாற்றம்!

சிவராஜ் சிங் சவுஹான்
சிவராஜ் சிங் சவுஹான்

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம், மாநில சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று தோற்கடிக்கப்பட்டது.

சட்டம் ஒழுங்கு, வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், ஊழல், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான பாகுபாடு, பெண்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள், விவசாயிகள் பிரச்சினைகள் மற்றும் பிற பிரச்சினைகளுக்காக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அரசுக்கு எதிராக காங்கிரஸ் நேற்று சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம், சட்டமன்றத்தில் பல சூடான கருத்துப் பரிமாற்றங்களைக் கண்டது. இந்த விவாதம் நேற்று மதியம் 12.20 மணியளவில் தொடங்கி நள்ளிரவு 12.35 மணி வரை இடைவேளையின்றி 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இரண்டு நாட்களாக விவாதம் நடத்தப்பட்டபிறகு இந்த தீர்மானம், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் தோற்கடிக்கப்பட்டது.

இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்திற்கு பதிலளித்த முதல்வர் சவுகான், எதிர்க்கட்சிகளின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். இதையடுத்து சபாநாயகர் கிரீஷ் கவுதம், அவையை ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in