காங்கிரஸ் தேசிய தலைவர் தேர்தல்: சசிதரூர் எம்.பிக்கு ஆதரவுக்கரம் நீட்டிய கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் தேசிய தலைவர் தேர்தல்: சசிதரூர் எம்.பிக்கு ஆதரவுக்கரம் நீட்டிய கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிடும் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் சசிதரூருக்கு , காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் எம்.பி ஆதரவு தந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து சோனியா காந்தி விலக முடிவெடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் பதவிக்கு அக்.17-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை.

கட்சி தலைமைக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடக்கும் தேர்தலில், திருவனந்தபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் சசி தரூர் முதலில் போட்டியிட களமிறங்கினார். இதையடுத்து அசோக் கெலாட் உள்ளிட்ட பலர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக பேச்சு எழுந்தது. இந்த நிலையில் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சித் தலைவர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இவருடன் ஜார்க்கண்ட் மூத்த காங்கிரஸ் தலைவர் கே.என்.திரிபாதியும் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், கார்கே - சசி தரூர் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில். சசி தரூருக்கு முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சசி தரூரை முன்மொழிவதில் பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன். சசி தரூர் போன்ற முற்போக்கு சிந்தனை உடையவரும், அறிவுசார் விவாதங்களை மேற்கொள்ளும் நபர் கட்சிக்கு இந்த நேரத்தில் தலைமை ஏற்றால் கட்சிக்கு வலு சேர்க்கும் என்பதை எண்ணி அவரை நான் ஆதரிக்கிறேன்’ என்று கூறியுள்ளார். கார்த்தி சிதம்பரத்தின் இந்த பதிவை சசிதரூரும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in