கர்நாடகா காங்கிரஸ் எம்.பி, டி.கே சுரேஷை சுட்டுக் கொல்ல வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா பேசிய விவகாரத்தில் சுரேஷ் அவருக்குப் பதில் சவால் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2024 - 25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தென் மாநிலங்களை ஆளும் அரசுகளிடம் இருந்து புகார் எழுந்துள்ளது.
கேரளா மற்றும் கர்நாடக அரசுகளின் சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. அதேபோல திமுக எம்.பிக்களும் நாடாளுமன்றத்தில் பிரச்சினையை எழுப்பியதுடன் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி, டி.கே சுரேஷ், "தென் மாநிலங்கலின் வரி வருவாயை இந்தி பேசும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தாரை வார்த்து கொடுக்கிறது. இந்த நிலைமை தொடருமேயானால் தென்னிந்திய மாநிலங்கள் தனிநாடு கோரும் நிலைமை உருவாகும்" என எச்சரித்திருந்தார். இது தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் சுரேஷின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியும் இதற்கு விளக்கம் தந்திருந்தது. இந்த நிலையில் கர்நாடகா பாஜகவின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, 'டி.கே.சுரேஷ் எம்.பி பிரிவினைவாதம் பேசுகிறார். அவரையெல்லாம் சுட்டுக் கொலை செய்ய வேண்டும்' எனக் கூறியிருந்தார். இது புதிய பிரச்சினையாக வெடித்துள்ளது.
ஈஸ்வரப்பா மிரட்டல் குறித்து கருத்து தெரிவித்த டி.கே.சுரேஷ் எம்.பி, "என்னை சுட்டுக் கொல்வதாக பேசியிருப்பதால் பாஜக தலைமை ஈஸ்வரப்பாவுக்கு ஆளுநர் பதவி தரக்கூடும். நான் யாரையுமே தூண்டிவிடப் போவதில்லை. ஈஸ்வரப்பா வீட்டுக்கு நானே செல்கிறேன். அவருக்கு தைரியம் இருந்தால் என்னைச் சுட்டுக் கொல்லட்டும். மகாத்மா காந்தியடிகளை படுகொலை செய்தவர்களுக்கு, கர்நாடகாவுக்காக குரல் கொடுத்த என்னை படுகொலை செய்வது பெரிய விஷயம் அல்ல. மாநிலத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகத்தானே குரல் கொடுத்தேன்" என்றார்.
இந்தநிலையில் டி.கே.சுரேஷின் சகோதரரும், கர்நாடகா துணை முதல்வருமான டி.கே சிவகுமார், "தைரியம் இருந்தால் சுரேஷை ஈஸ்வரப்பா சுட்டுக் கொல்லட்டுமே. இதற்கெல்லாம் அஞ்சுகிறவர்கள் நாங்கள் அல்ல. எங்கள் உடம்பில் எதனையும் எதிர்கொள்ளும் தைரியம் உள்ள ரத்தம்தான் ஓடுகிறது. ஈஸ்வரப்பாவுக்கு எங்கள் தரப்பில் சரியான பதிலடி மீண்டும் தருவோம்" என்று எச்சரித்துள்ளார்.
இதனால் கர்நாடக மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.