`நான் பாஜக வேட்பாளருக்குத்தான் வாக்களித்தேன்’- அதிர்ச்சி கிளப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ!

`நான் பாஜக வேட்பாளருக்குத்தான் வாக்களித்தேன்’- அதிர்ச்சி கிளப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ!

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவிற்கு வாக்களித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளராகத் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டனர். புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்காக இன்று நடைபெற்ற தேர்தலில் நாடு முழுவதும் உள்ள எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நாடாளுமன்ற அலுவலகம் மற்றும் சட்டமன்ற அலுவலகங்களில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. டெல்லி நாடாளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தலில் மத்திய அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான முகமது மொகிம், பாஜக வேட்பாளரான திரெளபதி முர்முவிற்கு வாக்களித்துப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். “நான் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தாலும், பாஜக வேட்பாளருக்கு வாக்களித்துள்ளது எமது தனிப்பட்ட விருப்பம். சொந்த மண்ணுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று மனதில் மேலோங்கிய எண்ணத்தால் திரௌபதி முர்முவிற்கு வாக்களித்துள்ளேன்” என்று வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக வேட்பாளரான திரௌபதி முர்முவும், காங்கிரஸ் எம்எல்ஏவான முகமது மொகிம் என்பவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in