வாட்ஸ் அப்பில் வந்ததை வாந்தி எடுக்கும் அண்ணாமலை: சீறும் செல்வபெருந்தகை!

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை வாட்ஸ் அப்பில் வந்ததை வாந்தி எடுக்கும் அண்ணாமலை: சீறும் செல்வபெருந்தகை!

செங்கோலையும், ஆதீனத்தையும் ராகுல்காந்தி அவமதித்துவிட்டார் என்ற அண்ணாமலையின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " இந்திய நாட்டு மக்கள் பிரச்சனைக்குப் பதிலளிக்காத, பிரதமர் மோடி தன்னை முன்னிலைப் படுத்துவதற்காக புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கிறார் என்று  ராகுல்காந்தி அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் பேசியதை,  செங்கோலையும், ஆதீனத்தையும்  அவமதித்துவிட்டார் என்று தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

செங்கோலைக் கைத்தடியாக பயன்படுத்தியது காங்கிரஸ் என்றும், ஜல்லிக்கட்டை தடுத்தது காங்கிரஸ் அரசு என்றும் உண்மைக்குப் புறம்பாக பொய்யாக ஒரு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். வாட்ஸ் அப்பில் வந்ததை வாந்தி எடுத்துள்ளார் அண்ணாமலை. அவர் பேசியதற்கு வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கின்றேன். 

திருவாவடுதுறை ஆதீனம் செங்கோலை பண்டித ஜவஹர்லால் நேருவிற்கு அன்பளிப்புப் பரிசாக அளித்தார். அதை அலகாபாத் காட்சியகத்தில் திருவாவடுதுறை ஆதீனம் நேருவுக்கு பரிசாகக் கொடுத்த செங்கோல் என்றுதான் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. எங்கேயும் கைத்தடி என்று எழுதப்படவில்லை. ஆட்சி மாற்றத்திற்காக கொடுக்கப்பட்டதில்லை இந்த செங்கோல் என்று தெளிவாகவும், அதற்கான எந்த வரலாற்றுச் சான்றும் இல்லையென்று அனைவரும் கூறும் நிலையில், உண்மைக்கு மாறாக பொய்யை மட்டும் பேசித் திரியும் அண்ணாமலை முதலில் வரலாற்று உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  

கடந்த 7.5.2014 அன்று பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி சார்ந்துள்ள பீட்டா அமைப்பு தொடுத்த வழக்கின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக தடை விதித்தது. அதற்குக் காரணம் காங்கிரஸ் அரசுதான் என்று சொல்வது அறியாமையின் உச்சம். மேலும், அப்போது 2014 நாடாளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. 

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வந்தது பாஜக அரசுதான். தற்போது தமிழ்நாட்டில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்து மேலும் 500 மருத்துவம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியது மத்திய அரசு. 

நாட்டுக்காக கடுமையாக உழைத்து ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஒரு மாதமாக பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்.பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் பேசாத வரலாற்றின் அரிச்சுவடி தெரியாத அண்ணாமலை அரசியல் பரபரப்புக்காக பொத்தாம், பொதுவாக பேசுவதெல்லாம் நகைப்பிற்குரியது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in