``மென்மையான இந்துத்துவா என்றால் ஒன்றுமில்லை. எனவே இந்துத்துவாவிற்கும், மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் கூறியுள்ளார்
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு திக்விஜய சிங் அளித்தப் பேட்டியில், "இந்துத்துவாவிற்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே மென்மையான, கடினமான இந்துத்துவா என்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை. அரசியலில் மதத்திற்கு இடமில்லை. ஒவ்வொரு நபருக்கும் அவரவர் மதத்தை பின்பற்ற உரிமை உண்டு. மதத்தின் பெயரால் ஓட்டுக் கேட்பது சட்டப்படி குற்றம். இந்துத்துவா என்ற சொல்லை உருவாக்கியவர் சாவர்க்கர் தான். இந்துத்வாவிற்கும் இந்து மற்றும் சனாதன தர்மத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது" என்று கூறினார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வலதுசாரி அமைப்பையும் ஆர்எஸ்எஸ்சின் துணை அமைப்பான பஜ்ரங்தளத்தையும் தடை செய்ய திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு, "எந்தவொரு அமைப்பையும் தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. அதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, பஜ்ரங்தளத்தில் உள்ள நல்லவர்களை மதிப்போம். ஆனால், ஆத்திரமூட்டும் பேச்சுகளைப் பேசுபவர்கள் மற்றும் வன்முறை, வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மேலும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் நல்ல வெற்றியை பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். "தேர்தலுக்கான எங்கள் தயாரிப்பு 2018ல் இருந்ததை விட 1.5 மடங்கு சிறப்பாக உள்ளது. 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி 150 இடங்களுக்கு மேல் பெற்றாலும் ஆச்சரியப்பட மாட்டேன்.
பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் 66 தொகுதிகளில் நாங்கள் நல்ல முடிவுகளைப் பெறுவோம் என்று நம்புகிறோம். முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால் மக்கள் பாஜக மீது ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே முடிவுகள் காங்கிரஸுக்கு சாதகமாக வரும். நேர்மையாகவும், விசுவாசமாகவும் இருந்தால் காங்கிரஸ் கட்சியை யாராலும் தோற்கடிக்க முடியாது. எங்கள் அமைப்பு பலவீனமாக உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் 2018-ம் ஆண்டை விட நாங்கள் பலமாக உள்ளோம். எங்கள் தவறுகளை சரிசெய்ய நாங்கள் உழைத்துள்ளோம். இந்த முறை நல்ல பலன் கிடைக்கும்” என்று கூறினார்.
2018ல் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 114 இடங்களை வென்றது. பாஜக 109 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கமல்நாத் அரசாங்கத்தை அமைத்தாலும், ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான 22 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கிளர்ச்சியால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது.