திரிபுராவில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!


திரிபுராவில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!

திரிபுராவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளன. இதற்காக நேற்றிரவு சிபிஎம் மற்றும் காங்கிரஸுக்கு இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியின் திரிபுரா பொறுப்பாளர் அஜய் குமார், மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தா பட்டாச்சார்ஜியுடன், நேற்றிரவு அகர்தலாவில் உள்ள சிபிஎம் மாநில தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு சிபிஎம் திரிபுரா மாநிலச் செயலாளரும், முன்னாள் திரிபுரா அமைச்சருமான ஜிதேந்திர சவுத்ரி தலைமையிலான இடதுசாரித் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தினார்கள்.

கூட்டத்திற்குப் பிறகு பேசிய அஜய் குமார், “திரிபுராவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. திரிபுராவிற்கு பயம் மற்றும் வன்முறையில் இருந்து விடுதலை தேவை. அதற்கு பாஜக ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

சிபிஐ-எம் மத்திய குழு உறுப்பினரான ஜிதேந்திர சவுத்ரி, காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பின் விவரங்களை வெளியிடாமல், தொகுதிப்பங்கீடு தொடர்பான செயல்முறை இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றும், இரு கட்சிகளுக்கு இடையேயான தொகுதி மாற்றங்களை இறுதி செய்ய இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் கூறினார்.

திரிபுராவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க, காங்கிரஸ் மற்றும் பழங்குடியினர் கட்சியான டிப்ரா (திப்ராஹா பழங்குடியின முற்போக்கு பிராந்திய கூட்டணி) ஆகியவற்றுடன் தொகுதிப் பங்கீடு செய்யத் தயாராக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in