2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் எதிர்க்கட்சிக் கூட்டணியை காங்கிரஸ் வழிநடத்தும் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அறிவித்துள்ளார்.
நாகாலாந்தில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "பிரதமர் நரேந்திர மோடி பலமுறை, 'நாட்டை எதிர்கொள்ளும் ஒரே மனிதர் நான்தான். வேறு யாரும் என்னைத் தொட முடியாது' என்று கூறியுள்ளார். எந்த ஜனநாயக மனிதனும் இதைச் சொல்வதில்லை, நீங்கள் ஒரு சர்வாதிகாரி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும், நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், மக்கள் உங்களுக்கு பாடம் கற்பிப்பார்கள்.
2024-ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். இதற்காக மற்ற கட்சிகளுடன் பேசி வருகிறோம், இல்லையெனில் ஜனநாயகமும் அரசியலமைப்பும் போய்விடும். 2024ல் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது, மற்ற அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து, நாங்கள் பெரும்பான்மை பெறுவோம். 100 மோடி அல்லது அமித்ஷா வரட்டும் பார்க்கலாம்" என்றார்.