வழக்கறிஞரான உங்களுக்கு வாய்ப்பு தந்ததே சோனியா குடும்பம்தான்!

கபில் சிபலுக்கு எதிராகக் குவியும் கண்டனங்கள்
வழக்கறிஞரான உங்களுக்கு வாய்ப்பு தந்ததே சோனியா குடும்பம்தான்!
கபில் சிபல்

நடந்துமுடிந்த 5 மாநிலத் தேர்தலில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியில் கலகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. தோல்வி குறித்து ஆராயவும் கட்சியை வலிமைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 13) டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செயற்குழுக் கூட்டம் நடந்தது. ஜி-23 தலைவர்கள் சிலரும் அதில் பங்கேற்றனர்.

அந்தக் கூட்டத்தின்போது, தானும், ராகுல் மற்றும் பிரியங்காவும் கட்சிப் பதவிகளை விட்டுவிலகத் தயார் என சோனியா காந்தி கூறியிருந்தார். அதை ஏற்க மறுத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவின் தலைமையில் நம்பிக்கை இருப்பதாகக் கூறினர்.

இந்நிலையில், சோனியா குடும்பம் பதவி விலகி, வேறு யாரேனும் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியிருந்தார். "நான் அனைவருக்குமான காங்கிரஸ் வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், சிலரோ, வீட்டுக்கான காங்கிரஸ் வேண்டும் என விரும்புகிறார்கள்" என்றும் அவர் கூறியிருந்தார்.

அவரது கருத்தைக் காங்கிரஸ் தலைவர்கள் பலர் கடுமையாகக் கண்டித்திருக்கின்றனர். ஆர்எஸ்எஸ், பாஜக-வின் மொழியில் கபில் சிபல் பேசுகிறார் என மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் விமசித்திருந்தார். “ஏன் நேரு - காந்தி குடும்பத்தினர் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் நினைக்கிறார்கள்? ஏனெனில், சோனியா காந்தி குடும்பத்தினரின் தலைமை இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி ஜனதா கட்சி ஆகிவிடும். பின்னர் காங்கிரஸைக் கொல்வதும், இந்தியா எனும் கருத்தாக்கத்தைச் சிதைப்பதும் எளிதாகிவிடும்” என்று ட்வீட் செய்திருந்தார்.

கட்சித் தலைமைக்கு எதிராகப் பகிரங்கமாக விமர்சனம் செய்வதற்குப் பதிலாக, கட்சித் தலைவர் பதவிக்கு கபில் சிபல் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறியிருந்தார்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

இந்நிலையில் அவர்களின் வரிசையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் இணைந்திருக்கிறார். முன்னதாக, தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்திருக்கும் சூழலில், கபில் சிபலின் இந்தக் கருத்து துரதிருஷ்டவசமானது என்று ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது அசோக் கெலாட் கூறியிருந்தார். நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அவர், “கபில் சிபல் காங்கிரஸ் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர் அல்ல. புகழ்பெற்ற வழக்கறிஞரான அவர் காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்தார். சோனியாவும் ராகுலும்தான் அவருக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொடுத்தனர். காங்கிரஸின் அரிச்சுவடி கூட தெரியாத ஒருவர் இப்படியெல்லாம் பேசுவது எதிர்பார்த்த ஒன்றுதான்” என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

Related Stories

No stories found.