மதசார்பற்ற கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை: நாராயணசாமி அதிரடி

முன்னாள் முதல்வர் நாராயணசாமி
முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் மதசார்பற்ற கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “ தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணிக்கு திமுக தலைமை தாங்குகிறது. ஆனால் புதுச்சேரியில் இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சிதான் தலைமை. 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் காங்கிரஸ் தலைமையில்தான் நடைபெற்றது. எந்த கட்சியும் பெரியது, சிறியது இல்லை. எல்லா கட்சிகளுக்கும் பலம் உள்ளது. மதசார்பற்ற அணிகள் ஒன்றாக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடு கூடாது.

குப்பை டெண்டரில் இமாலய ஊழல் நடந்துள்ளது என குற்றச்சாட்டு கூறியிருந்தேன். நான் மட்டுமல்ல துறையின் அமைச்சரே இதில் ஊழல் நடந்துள்ளது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார். இவ்விவகாரத்தில் நீதி விசாரணைக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட வேண்டும்.

முதல்வர் சில அரசு வழக்கறிஞர்கள் பெயர்களை பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பினார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்யப்பட்ட 35 பேரில் 15 பேர் தவிர்த்து மற்றவர்கள் வெளிமாநிலத்தை சார்ந்தவர்கள். அப்படியானால் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தகுதியில்லாதவர்களா?. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். முதல்வரின் பரிந்துரை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

கோவில், குடியிருப்பு, பள்ளி அருகில் விதிகளை மீறி 100-க்கும் மேற்பட்ட மதுபான கடைகளை அமைக்க முதல்வர் ரங்கசாமி அனுமதி அளித்துள்ளார். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் எதற்கும் வாய் திறப்பதில்லை. புதுச்சேரியில் தடுக்கி விழுந்தால் சாராயக்கடை என்ற நிலையை கொண்டு வந்தவர் ரங்கசாமி.

இதனால் இளைஞர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் குடும்பங்கள் சீரழிந்துள்ளன, வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளது'' என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in