‘பாஜகவின் ‘பி டீம்’தான் காங்கிரஸ்’ - குமுறும் குமாரசாமி

‘பாஜகவின் ‘பி டீம்’தான் காங்கிரஸ்’ - குமுறும் குமாரசாமி

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததாக கர்நாடக மாநிலம் கோலார் தொகுதியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ கே.ஸ்ரீனிவாச கவுடா தெரிவித்தார். “காங்கிரஸை நேசிப்பதால் அக்கட்சிக்கு வாக்களித்தேன்" என்றும் அவர் விளக்கமளித்திருக்கிறார். இதையடுத்து, பாஜகவின் ‘பி டீம்’ என காங்கிரஸ் கட்சியை முன்னாள் முதல்வர் குமாரசாமி விமர்சித்திருக்கிறார்.

224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 70 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 121 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 32 இடங்களும் உள்ளன. இதில் உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் களத்தில் உள்ளனர். பாஜக சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், கர்நாடக எம்எல்சி லஹர் சிங் சிரோயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் ரியல் எஸ்டேட் அதிபர் குபேந்திர ரெட்டி களமிறங்கியுள்ளார்.

4 மாநிலங்களவை இடங்களுக்கு 6 பேர் போட்டியிடுவதால் கர்நாடக அரசியல் களம் சூடுபிடித்தது, வெற்றிபெறுவதற்காக சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் குதிரைபேரம் நடைபெறுவதாகவும் அரசியல் கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்டன. இந்தப் பரபரப்பான சூழலில் இன்று கர்நாடக சட்டப்பேரவையில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

முன்னதாக நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா ட்விட்டரில் ஒரு கடிதத்தைப் பகிர்ந்துகொண்டார், அதில் மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமியும், பாஜகவை தோற்கடிக்க ஜேடிஎஸ் வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததாக கர்நாடக மாநிலம் கோலார் தொகுதியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ கே.ஸ்ரீனிவாச கவுடா கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அதிருப்தி தெரிவித்திருக்கும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் கட்சி தனது சுயரூபத்தைக் காட்டிவிட்டது என்றும், பாஜகவின் ‘பி டீம்’தான் காங்கிரஸ் என்றும் விமர்சித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in