'காங்கிரஸ் கட்சி பாஜகவின் பி டீம்' - மம்தா பானர்ஜியின் திடீர் அட்டாக்

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிகாங்கிரஸ் கட்சி பாஜகவின் பி டீம்

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளை தாக்கிப் பேசிய மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சி பாஜகவின் ‘பி டீம்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

திரிபுரா சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 16-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மேற்கு வங்கத்துக்கு வெளியே மற்ற மாநிலங்களில் தனது கட்சியின் தடத்தை விரிவுபடுத்தும் முனைப்புடன், மம்தா பானர்ஜி செவ்வாயன்று அகர்தலாவில் தனது ஆதரவாளர்களுடன் பேரணியை நடத்தினார். அப்போது பேசிய அவர், "இப்போது உள்ள காங்கிரஸ் நான் முன்பு இருந்த காங்கிரஸ் இல்லை. அப்படி இருந்திருந்தால் நான் அந்தக் கட்சியை விட்டு விலகியிருக்க மாட்டேன், இப்போதுள்ள காங்கிரஸ் பாஜகவின் பி டீம்" என்று கூறினார்

திரிபுராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், " மேற்கு வங்கத்தில் வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளோம். உடல்நலக் காப்பீட்டுக்காக 'ஸ்வஸ்த்ய சதி' அட்டைகளை வழங்குகிறோம். மத்திய அரசு வழங்கிய ஆயுஷ்மான் பாரத் அட்டையில் நம்பகத்தன்மை இல்லை. பெங்கால் மாதிரி சர்வதேச அளவில் விவாதிக்கப்படுகிறது. திரிபுராவில் நடக்கும் டபுள் எஞ்சின் ஆட்சியில் மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? உங்கள் கணக்கில் ரூ.15 லட்சம் வந்துள்ளதா?. பாஜகவால் அரசியல் ரீதியாக சண்டையிட முடியாது, அதனால்தான் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு அனுப்புகிறது என்றார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கருப்புப் பணம் திரும்ப வந்துவிட்டதா? இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமும், பாரத ஸ்டேட் வங்கியும் மூழ்கினால், எங்களின் பணம் திரும்பக் கிடைக்குமா? அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றின் உதவியால் நாங்கள் அழிந்துவிடுவோம் என்று நீங்கள் நினைத்தால், அது எளிதானது அல்ல" என்றுகூறினார்.

திரிபுராவில் ஆளும் பாஜக, ஐபிஎப்டி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. சிபிஎம், காங்கிரஸ், சிபிஐ, பார்வர்டு பிளாக் போன்ற கட்சிகள் இணைந்து களமிறங்கியுள்ளது. திப்ரா மோதா கட்சி 42 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. திரிணமூல் காங்கிரஸ் 28 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in