குஜராத் சட்டசபைக்குத் தேர்வான ஒரே ஒரு முஸ்லிம் எம்எல்ஏ: யார் தெரியுமா?


குஜராத் சட்டசபைக்குத் தேர்வான ஒரே ஒரு முஸ்லிம் எம்எல்ஏ: யார் தெரியுமா?

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு காங்கிரஸின் இம்ரான் கெடவாலா மட்டுமே ஒரே முஸ்லிம் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அகமதாபாத் நகரின் ஜமால்பூர்-காடியா சட்டமன்றத் தொகுதியில் ஏற்கெனவே காங்கிரஸ் எம்எல்ஏவாக இருக்கும் இம்ரான் கெடவாலா, இந்த தேர்தலிலும் 13,658 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அவர் மட்டுமே இப்போது குஜராத்தில் உள்ள ஒரே முஸ்லிம் எம் எல் ஏ ஆவார்.

இந்த தேர்தலில் மூன்று சிட்டிங் எம்எல்ஏக்கள் உட்பட 6 முஸ்லிம் வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்தியது. இதில் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உட்பட 5 வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். 2017-ல், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஐந்து வேட்பாளர்களில் மூன்று பேர் வெற்றி பெற்றனர். குஜராத்தின் மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்.

அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தரியாபூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சிட்டிங் எம்எல்ஏ கியாசுதீன் ஷேக், பாஜகவின் கவுசிக் ஜெயினிடம் தோல்வியடைந்தார். காங்கிரஸின் மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான முகமது ஜாவேத் பிர்சாடா, வான்கனேர் தொகுதியில் பாஜகவிடம் தோல்வியை சந்தித்தார். அந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் 53,110 வாக்குகள் பெற்று பிர்சாடாவின் தோல்விக்கு பங்களித்தார்.

ஆம் ஆத்மி கட்சி முஸ்லிம் வேட்பாளர்களை ஜமால்பூர்-காடியா, தரியாபூர் மற்றும் ஜம்புசார் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் நிறுத்தியது, ஆனால் அவர்களில் யாரும் வெற்றிபெறவில்லை. பாஜக ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை. அதே சமயம் ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர், ஆனால் அவர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட்டனர். அந்த வேட்பாளர்களில் இருவர் அந்தந்த தொகுதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in