
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே முன்னிலையில் நடிகை விஜயசாந்தி அக்கட்சியில் நேற்று இணைந்த நிலையில், அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக திகழ்ந்த நடிகை விஜயசாந்தி, பாஜகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பிறகு தனிக்கட்சி தொடங்கிய அவர், அக்கட்சியை தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியுடன் இணைத்தார். பிறகு அக்கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 2020-ல் மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய அவர் அக்கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.
எனினும் கடந்த ஆண்டு முதலே பாஜகவில் தனக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்பதை பொதுவெளியில் பேசி வந்தார். பாஜக தேசிய செயற்குழு கூட்டம் மற்றும் கட்சி பொதுக்கூட்டம் எதிலும் நடிகை விஜயசாந்தி மேடை ஏறி பேசவில்லை. தொடர்ந்து கட்சி நடவடிக்கைகள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்துவந்த விஜயசாந்தி, சில தினங்களுக்கு முன்பு பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டிக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவைக்கவும் செய்தார்.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் தெலங்கானா தேர்தலுக்கான பரப்புரை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நடிகை விஜயசாந்தியை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. இந்நிலையில் விஜயசாந்தி காங்கிரஸுக்கு சென்றிருப்பது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், அந்த கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.