
காங்கிரஸிடம் புதிய தேர்தல் வாக்குறுதி சூத்திரம் உள்ளது. ஆனால் அவர்களின் தேர்தல் உத்தரவாதங்கள் நாட்டை திவாலாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற காரணமாக அமைந்த ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளிப்படையாகக் குறிப்பிட்டு பேசினார். அவர், "காங்கிரஸிடம் புதிய தேர்தல் உத்தரவாத சூத்திரம் உள்ளது. ஆனால் அவர்கள் தங்கள் உத்தரவாதங்களை நிறைவேற்றுகிறார்களா? அவர்களின் உத்தரவாதங்கள் நாட்டை திவாலாக்கும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, வறுமையை அகற்றுவோம் என்று காங்கிரஸ் உத்தரவாதம் அளித்தது. ஆனால் அது ஏழைகளுக்கு அவர்கள் செய்த மிகப்பெரிய துரோகமாக மாறியது.
ஏழைகளை தவறாக வழிநடத்துவதும், அவர்களைப் பின்னோக்கி தள்ளுவதும் காங்கிரஸின் கொள்கையாக உள்ளது. இதனால் ராஜஸ்தான் மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸால் ராஜஸ்தானுக்கு என்ன கிடைத்தது?. எம்எல்ஏக்கள், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்கின்றனர்'' என்றார்.
இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தானுக்கு பிரதமர் மோடி இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக பயணம் மேற்கொள்கிறார். இந்த பேரணியானது மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடைபெற்றது.