300 யூனிட் இலவச மின்சாரம் - பெண்களுக்கு ரூ.1500: இமாசல பிரதேச தேர்தலில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதிகள்!

300 யூனிட் இலவச மின்சாரம் - பெண்களுக்கு ரூ.1500: இமாசல பிரதேச தேர்தலில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதிகள்!

பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு புத்துயிர் அளிப்பது, 300 யூனிட் இலவச மின்சாரம், ரூ. 680 கோடி ஸ்டார்ட்அப் நிதி, ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் மற்றும் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ. 1,500 போன்ற வாக்காளர்களை கவரும் தேர்தல் அறிக்கையை இமாசல பிரதேச தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

நவம்பர் 12-ம் தேதி நடைபெறும் இமாசல பிரதேச தேர்தலில் கூட்டுத் தலைமையின் கீழ் போட்டியிட உள்ளதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடிய பிறகு முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் தானி ராம் ஷாண்டில், பாஜக ஆட்சி இமாசல பிரதேச மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளைக்கூட அக்கட்சி இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார். தற்போது காங்கிரஸ் வெளியிட்டுள்ளது வெறும் தேர்தல் அறிக்கை மட்டுமல்ல, இமாச்சலப் பிரதேச மக்களின் மேம்பாடு மற்றும் நலனுக்காக தயாரிக்கப்பட்ட ஆவணம் என்றும் ஷண்டில் கூறினார்.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இமாசல பிரதேசத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா, முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் காங்கிரஸ் செயலாளர்கள் தேஜிந்தர் பால் பிட்டு மற்றும் மணீஷ் சத்ரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன என்றும், இது குறித்து மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதி, சட்ட ஆலோசனை பெறுவோம் என்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

இமாசல பிரதேச மாநிலத்தில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் போதைப்பொருள் தடுப்பு அமலாக்க நிறுவனம் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. மேலும், அதிகாரிகளைத் துன்புறுத்துவதற்காக ஜெய்ராம் தாக்கூர் அரசாங்கம் செய்த அனைத்து இடமாற்றங்களும் ரத்து செய்யப்படும் என்றும், பழங்கள் மற்றும் பயிர்களின் விலையை நிர்ணயிக்கும் ஆப்பிள் விவசாயிகளின் பிரதிநிதித்துவத்துடன் விவசாய மற்றும் விவசாயிகள் குழு அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

டாக்சி ஓட்டுநர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்றும், ஆட்டோ அனுமதிக் காலத்தை 10 ஆண்டுகளில் இருந்து 15 ஆண்டுகளாக உயர்த்துவதாகவும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. பத்திரிக்கையாளர்களுக்கு ஓய்வூதியம், துப்பாக்கி லைசென்ஸ் கட்டணம் குறைப்பு, மாநிலத்தின் கடன் சுமை குறைக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in