‘வாக்குறுதிகளுக்கு கியாரண்டி அட்டை’ -கர்நாடகத்தில் காங்கிரஸ் விநியோகம்!

இல்லத்தரசிக்கு கியாரண்டி அட்டை வழங்கும் டி.கே.சிவக்குமார்
இல்லத்தரசிக்கு கியாரண்டி அட்டை வழங்கும் டி.கே.சிவக்குமார்

‘நாங்க கியாரண்டி..’ என்று விளம்பர வாசகம் போல, கர்நாடக காங்கிரசார், தங்கள் வாக்குறுதிகளுக்கு உத்திரவாதம் தந்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே மாதம் எதிர்பார்க்கப்படும் சூழலில், அதற்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே அங்கே தேர்தல் பிரச்சார காய்ச்சல் அதிகரித்திருக்கிறது. வளர்ச்சித் திட்டங்களை திறந்து வைக்க, புதிய திட்டங்களை அறிவிக்க என, கடந்த 2 மாதங்களில் 6 முறை கர்நாடகத்துக்கு வந்திருக்கிறார் பிரதமர் மோடி. பாஜகவின் பிரதான நட்சத்திர முகமான மோடி, நேற்று மண்டியா மாவட்டத்தில் நிகழ்த்திய பிரமாண்ட ரோட் ஷோ காங்கிரஸாரை சீண்டி இருக்கிறது.

பதிலடியாக திண்ணைப் பிரச்சாரத்தில் இறங்கி வீடுவீடாக சென்று இல்லத்தரசிகளிடம் வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகிறது காங்கிரஸ். சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், முத்தான 3 திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் உறுதியளித்திருக்கிறது. அவை அனைத்துமே சாமானிய குடும்பங்களை குறிப்பாக இல்லத்தரசிகளை குறிவைத்திருக்கின்றன.

அவற்றில் முதலாவது, க்ருஹ லக்‌ஷ்மி எனும் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.2000 வழங்குவது. அடுத்தது க்ருஹ ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் வீடுதோறும் 200 யூனிட் மின்சாரம் வழங்குவது. மூன்றாவது அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டின் கீழுள்ள குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவது.

இந்த 3 வாக்குறுதிகளையும் ஒரு அட்டையில் அச்சிட்டு, அதில் காங்கிரஸ் தலைவர்கள் கையெழுத்திட்டு வீடுவீடாக இல்லத்தரசிகளை சந்தித்து ‘உங்க வாக்குக்கு நாங்க கியாரண்டி’ என்று அடித்துப்பேசி பிரச்சாரம் செய்து வருகின்றனர். மோடி வந்து சென்ற மண்டியா மாவட்டத்தில், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையிலான காங்கிரஸார் இன்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in