அம்பேத்கரின் அரசியலை முடிவுக்கு கொண்டுவர சதி செய்தது காங்கிரஸ் - பிரதமர் மோடி சாடல்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அம்பேத்கரை அவமரியாதை செய்து, அவரது அரசியலை முடிவுக்கு கொண்டு வர சதி செய்தது காங்கிரஸ் கட்சிதான் என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த ஐந்து மாநிலங்களிலும், அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7ம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அன்றே மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் நவம்பர் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பா.ஜ.க என அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் நேற்று (13-11-23) தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், "சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கும், துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோவுக்கும் இடையே 2 1/2 ஆண்டுகால பதவி என்று ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மதிக்காமல், பூபேஷ் பாகேல் தொடர்ந்து ஐந்து வருடம் முதல்வராக இருந்து சிங் தியோவை கைவிட்டுவிட்டனர். தங்களது கட்சியின் மூத்த தலைவர்களையே காங்கிரஸ் கைவிடும்போது, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றாமல் மக்களை ஏமாற்றுவதும் நிச்சயம்தான்.

சட்டமேதை அம்பேத்கர்
சட்டமேதை அம்பேத்கர்

சத்தீஸ்கரில் தனது கதை முடியப்போகிறது என்று காங்கிரஸுக்கும் புரிந்துவிட்டது. டெல்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர்களும், அரசியல் விமர்சகர்களும் முதல்வர் பூபேஷ் பாகேல் தனது சொந்த தொகுதியிலேயே தோற்கடிக்கப்படுவார் என்று என்னிடம் கூறினர். வளர்ச்சி குறித்து நான் தொடர்ந்து பேசுவது காங்கிரஸுக்கும் பிடிக்கவில்லை. எனவே, காங்கிரஸ் ஆட்சி வெளியேறுவதற்கான 'கவுண்ட் டவுன்' ஆரம்பமாகிவிட்டது. காங்கிரஸ் கட்சி என்னை வெறுக்கிறது. என்னை மட்டுமல்ல நான் சேர்ந்த சாதியைக் கூட காங்கிரஸ் வெறுக்க தொடங்கிவிட்டது. மோடியின் பெயரில் உள்ள ஒட்டுமொத்த இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தையும் கடந்த சில மாதங்களாக வெறுத்து விமர்சனம் செய்து வருகிறது.

இது குறித்து நீதிமன்றம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸிடம் கூறியது. ஆனால், நீதிமன்றம் சொன்ன பிறகும் கூட மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டனர். இதர பிற்படுத்தப்பட்டோர் சாதி மீது காங்கிரஸ் எவ்வளவு வெறுப்பு வைத்துள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. அம்பேத்கரை அவமரியாதை செய்ததும் காங்கிரஸ்தான். அவரது அரசியலை முடிவுக்கு கொண்டு வர சதி செய்ததும் காங்கிரஸ்தான். ஆகவே, வாக்கு வங்கி அரசியலுக்காகவும், சமரச அரசியலுக்காகவும் காங்கிரஸ் என்ன வேண்டுமானாலும் செய்யும். சத்தீஸ்கரில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in